TVK அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குப் பிறகு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறை சார்பில் 25 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சிறியது முதல் பெரியது வரையிலான பல்வேறு பணிகளுக்கு 1,000-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் விடப்பட்டுள்ளன.

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் செயல்படும் MAWS துறையின் டெண்டர்களில் ஒப்பந்ததாரர்களிடையே கடுமையான போட்டி நிலவுவதால், திட்டச் செலவில் 30% வரை அரசுக்கு மிச்சம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 டெண்டர்களில் ஆய்வு

மதுரை, சேலம், திருச்சி, கரூர், வேலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் விடப்பட்ட சுமார் 10 டெண்டர்களை ஆய்வு செய்ததில், சாலை அமைத்தல், பயோ-மைனிங், குடிநீர் திட்டங்கள், கிணறு தோண்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகளவில் போட்டி நிலவியது தெரியவந்துள்ளது.

ரூ.50 லட்சம் முதல் ரூ.100 கோடி வரையிலான பணிகளுக்கு 10 ஒப்பந்ததாரர்கள் வரை போட்டியிட்டுள்ளனர். பல பணிகளில் அரசு நிர்ணயித்த மதிப்பை விட குறைவான தொகைக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்கள் கூட்டாக விலையை நிர்ணயிக்கும் ‘கார்ட்டல்’ முறைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கூடுதல் செலவுக்கு கட்டுப்பாடு

“சிறிய பணிகள் முதல் பெரிய பணிகள் வரை ஒப்பந்ததாரர்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. இதன் மூலம் அரசுக்கும் பணம் மிச்சமாகிறது. திட்ட மதிப்பை அதிகரிக்க வேண்டுமெனில், உயர் அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட விகித அட்டவணைப்படி (SOR) திட்ட மதிப்பீடுகளைத் தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியும் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டெண்டர் கோரும் போது திட்ட மதிப்பு 2%க்கு மேல் அதிகரித்தால், உயர் அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரமில்லாத பணிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான ஒப்பந்ததாரர்களை மட்டும் அழைத்து டெண்டர் விடக்கூடாது என்றும், பெரிய பணிகளை சிறு பணிகளாகப் பிரித்து டெண்டர் விடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துல்லியமான மதிப்பீட்டுக்கு முக்கியத்துவம்

அடுத்தகட்டமாக, திருத்தப்பட்ட SOR அடிப்படையில் பணிகளுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளை துல்லியமாகத் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

டெண்டர்களை தொடர்ந்து கண்காணித்து வரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “ரூ.100 மதிப்புள்ள பணிக்கு ஒரு ஒப்பந்ததாரர் ரூ.28 குறைத்து, ரூ.72-க்கு டெண்டர் கோருகிறார் என்றால், அந்தப் பணியின் உண்மையான செலவு சுமார் ரூ.65 ஆகத்தான் இருக்க வேண்டும். அதிலும் ஒப்பந்ததாரருக்கு ரூ.7 வரை லாபம் இருக்கலாம்” எனக் கூறினார்.

“தனக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் யாரும் டெண்டர் கோரமாட்டார்கள். புதிதாக வரும் ஒப்பந்ததாரர்கள்கூட குறைந்தது 2% லாபம் வைத்துத்தான் டெண்டர் கோருவார்கள். குறைந்த விலைக்கு டெண்டர் கோரப்படுவது நல்ல தொடக்கம். இதன் மூலம், கடந்த காலங்களில் பணிகளுக்கான மதிப்பீடுகள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது. இனி துல்லியமான மதிப்பீடுகளைத் தயாரிக்க வேண்டும்” என்றார்.

அதேநேரத்தில், ஒப்பந்ததாரர்களின் கூட்டணி முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டதாக இப்போதே கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “திமுக ஆட்சியிலும் முதல் இரண்டு ஆண்டுகளில் போட்டி அடிப்படையிலான டெண்டர்கள் நடைபெற்றன. அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான டெண்டர்களை விடுகிறது. இதில் 20% வரை சேமிப்பு ஏற்பட்டால், அரசுக்கு சுமார் ரூ.60,000 கோடி மிச்சமாகும்” என்றும் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.