சென்னை, ஆக.29: தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், கட்டட அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, தரைத் தளம் மற்றும் இரண்டு தளங்கள் (G+2 Floors) கொண்ட குடியிருப்புக் கட்டடங்களுக்கு சுய சான்றிதழ் மூலம் கட்டட அனுமதி பெறுவதற்கான அதிகபட்ச பரப்பளவு 3,500 சதுர அடியிலிருந்து 5,000 சதுர அடியாக உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகவும் கட்டட அனுமதி பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய வணிகக் கட்டடங்களுக்கு சுய சான்றிதழ்
சிறிய வணிகக் கட்டடங்களுக்கான அனுமதி நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட உள்ளது. 1,500 சதுர அடி FSI பரப்பளவு வரையிலான கட்டடங்களுக்கு சுய சான்றளிப்பு முறையில் அனுமதி வழங்கப்படும்.

இதன்மூலம், கட்டட அனுமதிக்காக மனுதாரர்கள் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய தேவை தவிர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகக் கட்டடங்களுக்கான அனுமதி வரம்பு உயர்வு
மேலும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வணிகக் கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வழங்கும் அதிகார வரம்பு தற்போதுள்ள 2,000 சதுர அடியிலிருந்து 5,380 சதுர அடியாக (500 சதுர மீட்டர்) உயர்த்தப்பட உள்ளது.

இதன் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் எளிதாக கட்டட அனுமதி பெற முடியும். கட்டட அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்துவதுடன், பொதுமக்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு ஏற்படும் அலுவல் சிரமங்களையும் குறைக்க இந்த நடவடிக்கைகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.