டில்லி
மத்திய அரசு வரி வருமானத்தில் இருந்து தமிழகத்துக்கு அளிக்கும் நிதி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.2005.1 கோடி அதிகரிக்க உள்ளது.
இந்த ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது மத்திய அரசு வரி வருமானத்தில் இருந்து தமிழகத்தின் பங்காக ரூ.33,978 கோடி அளிக்கலாம் என தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அது குறைந்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு தமிழகத்துக்கு வரிப் பங்காக ரூ.32,553.84 கோடி கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசு வசூலித்த வரியில் மாநில பங்காக தமிழ்நாட்டுக்கு ரூ. 30,448 கோடி கிடைத்தது. இந்த பங்கில் பெரும் பகுதி கார்பரேட் வரி அதை அடுத்து மத்திய ஜி எஸ் டி வசூலில் இருந்து கிடைத்துள்ளது. இதைத் தவிர வருமான வரி மற்றும் எக்சைஸ் டூடி ஆகியவை மூலமும் மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
இந்த வருடம் கார்பரேட் வரிகளில் இருந்து தமிழகத்துக்கு ரூ.11,090 கோடி பங்கு கிடைக்க உள்ளது. இது சென்ற ஆண்டை விட ரூ.1377 கோடி அதிகமாகும். அடுத்ததாக மத்திய ஜி எஸ் டி யில் இருந்து ரூ.8864 கோடி பங்கு கிடைக்க உள்ளது. இது சென்ற ஆண்டை விட ரூ.386 கோடி அதிகமாகும். இது குறித்து அதிகாரி ஒருவர் தற்போது ஜிஎஸ்டி வசூல் குறைவாக உள்ளதாகவும் பண்டிகை சமயங்களில் இது அதிகரிக்க உள்ளதால் தமிழகத்தின் பங்கு மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளர்.
அந்த அதிகாரி, “மாநிலங்களுக்கிடையே ஆன சென்ற வருட ஜிஎஸ்டி நிலுவை தொகையான ரூ.5454 கோடியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. விரைவில் அது கிடைக்கும் என நம்புகிறோம். இந்த வருட ஆரம்பத்தில் ஆளுநர் தனது உரையில் ரூ.7214 கோடி ஜிஎஸ்டி பங்கு மத்திய அரசு தர வேண்டி உள்ளதாக குறிபிட்டிருந்தார். அதில் ரூ. 5454 கோடி மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தவிர இழப்பீடு தொகையாக ரூ. 2017-18 ஆம் வருடம் ரூ.455 கோடியும் 2018-19 ஆம் வருடம் ரூ. 1305 கோடியும் தர வேண்டி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.