சென்னை: முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்த்தி பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை & சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதற்கிடையில் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக முன்னாள் எம்எல்எக்ளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, “சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 30,000-லிருந்து ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும்.
சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ. 15,000 -லிருந்து ரூ. 17,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ. 75,000 என்பது ரூ. 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஏற்கெனவே இந்த ஆண்டின் மருத்துவப்படி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ரூ. 25,000 விதிகள் திருத்தம் செய்யப்பட்டபிறகு வழங்கப்படும்”
இவ்வாறு அறிவித்தார்.