புதுடெல்லி:
ருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை வருமான வரித்துறை நீட்டிப்பு செய்துள்ளது. இதன்படி தனிநபர்கள் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும், நிறுவனங்கள் நவம்பர் 30ம் தேதி வரையிலும் கணக்கு தாக்கல் செய்யலாம்.

Income Tax

வருமான வரி சட்டப்படி, வருமான வரி படிவம் 1 அல்லது வருமான வரி படிவம் 4 தாக்கல் செய்வோரு, ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் உண்டு. இதுபோல் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிறுவனங்களின் கணக்குகளை அக்டோபர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில், கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் ஆணையம் நீட்டிப்பு செய்துள்ளது. இது குறித்து இந்த ஆணையம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோருக்கு கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனி நபர்கள், 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. இதுபோல் நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16ஐ வழங்குவதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு ஜூலை 15ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

வரி தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க கெடு அக்டோபர் 31ம் தேதி வரையிலும், விலைச் சான்று சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு நவம்பர் 30ம் தேதி வரையிலும் என ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல், வருமான வரி கணக்கு தாக்கலில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, நிதி நிறுவனங்கள் பரிவர்த்தனை அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கெடு, மே 31ம் தேதியில் இருந்து ஜூன் 30ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.
2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களை மத்திய நேரடி வரிகள் ஆணையம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. ஆனால், கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதில் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளவில்லை.

வருமான வரி தாக்கல் செய்வதற்கு www.incometaxgov.in என்ற புதிய இணையதளத்தை வரும் ஜூன் 7ம் தேதி துவக்க உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு இணக்கமான வகையில் இந்த புதிய இணையதளம் இருக்கும் என தெரிவித்துள்ளது. தற்போது வழக்கத்தில் உள்ள www.incometaxindiaefiling.gov.in இணையதளம் செயல்பாட்டில் அகற்றப்பட்டு, புது இணையதளம் ஜூன் 7ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.