கோவை: பிரபல பிராய்லர் கோழி விற்பனையாளர்களான சுகுணா சிக்கன் உரிமையாளர் மற்றும் அலுவலகங்களில் வரி ஏய்ப்பு புகார் காரணமாக, இன்று 4வது நாளாக வருமான வரி சோதனை தொடர்கிறது.
பிரபலமான சுகுணா சிக்கன் உரிமையாளர்களான சுகுணா புட்ஸ் நிறுவனங்கள், கோவை, ஈரோடு பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின்மீதான வரி ஏய்ப்பு புகார்களைத் தொடர்ந்து, வருமான வரித்துறையினர் செப்டம்பர் 24ந்தேதி சோதனையிடத் தொடங்கினர். இந்த சோதனை 4வது நாளாக தொடர்கிறது.

கோவையைத் தலைமையிடமாக கொண்ட சுகுணா சிக்கன் நிறுவனம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது. மேலும், வங்கதேசம், கென்யா, இலங்கையில் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இவற்றின்கிளைகள் உள்ளன. . முக்கியமாக கடந்த சில ஆண்டுகளாக இவர்களது வருமானத்திற்கும், இந்நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி கணக்கிற்கும் பொருத்தமில்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த காரணத்தினால் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அலுவலகம், ஈரோடு பகுதியில் உள்ள சுகுனா சிக்கன் நிறுவனம் உள்பட பல பகுதிகளில், வரித்துறை அதிகாரிகள் கடந்த 23ம் தேதி சோதனையை தொடங்கினர்.
இந்த சோதனை இன்று 4வது நாளாக தொடர்கிறது. இதே போல உடுமலைப்பேட்டை நேரு வீதியில் உள்ள மண்டல அலுவலகம் மற்றும் வரதராஜபுரம், கணபதிபாளையம் ஆகிய பகுதியில் உள்ள கோழி தீவன உற்பத்தி ஆலைகங்ள, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள கோழிப்பண்ணை அதிபர் வாங்கிலி சுப்பிரமணியம் வீடு மற்றும் அலுவலகத்திலும் 4வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சோதனையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நஷ்ட கணக்கு காட்டி குறைந்த அளவில் வருமான வரி செலுத்தி மோசடி செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டு பல்வேறு விதமான உண்மைகள் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக வருமானவரித்துறையினர் சோதனையில் ரொக்கம், தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. வரி ஏய்ப்பு செய்த பணத்தைக் கொண்டு தங்கம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.