சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு தொழிலதிபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை, என்ஐஏ, வருமான வரித்துறையினரின் சோதனைகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனையால் பல அமைச்சர்கள் ஆடிப்போய் உள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டனின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீடுகளிலும், அவரது உறவினர்களின் வீடுகள் நிறுவனங்கள் மற்றும் நுங்கம்பாக்கம், மண்ணடியில் உள்ள தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், கே.கே. நகர் மற்றும் தியாகராய நகர் பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதுபோல, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் கிருஷ்ணாவின் கோபாலபுரம் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.