சென்னை:
ஜெயா தொலைக்காட்சி, ஜாஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து வி.கே.சசிகலவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வி.கே.சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி என்று கூறப்படுவது ஜெயா டி.வி. இதன் அலுவலகம் சென்னை ஈக்காடுதாங்கல் பகுதியில் உள்ளது.
இன்று காலை முதல் இந்த அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அதே போல சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்று கூறப்படும் சென்னை வேளச்சேரியில் உள்ள ஜாஸ் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது.
அதே போல சசிகலாவின் உறவினரும், சொத்துக்குவிப்பு வழக்கில் அவருடன் சிறைப்பட்டுள்ளவருமான இளவரசியின் மகள் வீட்டிலும் சோதனை நடக்கிறது. கிருஷ்ணப்பிரியா வீடு சென்னை தி.நகரில் உள்ளது.
வீட்டினுள் இருப்பவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. வெளியில் இருந்தும் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
கிருஷ்ணப்பிரியா வீட்டில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.
பரோலில் வந்த சசிகலா இந்த வீட்டில்தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வி.கே. சசிகலாவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் நிறுவனம், டி.வி.வி. தினகரன் இல்லம், சசிகலா – தினகரன் உறவினர்களான திவாகரன், கிருஷ்ணப்பிரியா ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை முதல் வருமானவரி சோதனை நடந்துவருகிறது. ஜெயலலிதா ஓய்வெடுக்கும் இல்லமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பங்களாவிலும் சோதனை நடக்கிறது.