டில்லி:

‘‘பள்ளி பாடத் திட்டத்தில் அனைத்து மத புத்தகங்களையும் இணைத்து, சகிப்புதன்மையை ஊக்குவிக்க வேண்டும்’’ என மனிதவள மேம்பாட்டு துறையை மத்திய அமைச்சர் மேனகா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்வி துறையில் உயர் முடிவுகளை தீர்மானிக்கும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் 65வது கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய குழந்தைகள் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி இத்தகைய கருத்துக்களை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் பேசுகையில், ‘‘பல தரப்பட்ட மதங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் சகிப்புதன்மையை ஏற்படுத்தும் வகையில் நல்லொழுக்க வகுப்புகள் மற்றும் அனைத்து மத புத்தகங்களையும் சேர்க்க வேண்டும். இதன் மூலம் பிற மதங்களையும் மாணவர்கள் மதிக்கும் சூழ்நிலை ஏற்படும்’’ என்றார்.

இந்த கூட்டத்தில் ஒடிசா கல்வி அமைச்சர் பத்ரி நாராயண் பத்ரா பேசுகையில், ‘‘ மத சகிப்புதன்மை மற்றும் தேசப்பற்று உணர்வுகளுக்கு வழி ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்’’ என்றார்.

மேலும், பள்ளிகளில் மதியம் சைவ உணவு வழங்குவதல், வருகை பதிவேடு எடுக்கும் சமயத்தில் ‘உள்ளேன் ஐயா’ என்று கூறுவதற்கு பதிலாக மாணவர்கள் ‘ஜெய்ஹிந்’ என்று கூற வேண்டும். என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை கலாச்சாரம் சார்ந்ததமாக மாற்றி அமைக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டது.