ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்றது வரலாற்று சிறப்புமிக்கதாக மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த வர்ணிப்பை நியாயம் செய்வதற்கான காரணங்கள் மிக அதிகம்.
இந்திய அணி, அமீரகத்தில் ஐபிஎல் முடிந்தவுடன், இந்தியா வராமல், அப்படியே ஆஸ்திரேலியா சென்றது. அங்கே, பல்வேறு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியது. நீண்டநாட்கள் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் சூழலில், இந்த தனிமைப்படுத்தலும் இந்திய அணியின் மனநிலையை பலவீனப்படுத்துவதாக அமைந்தது.
ஒருநாள் & டி-20 தொடர்கள் முடிந்தபிறகு, டெஸ்ட் தொடர் தொடங்கியது. ஆனால், இதிலிருந்துதான் சிக்கல்கள் பெரிதாக தொடங்கின. ஏற்கனவே இஷாந்த் ஷர்மா இல்லாத நிலையில், முதல் இரண்டு போட்டிகளில், ஹிட் மேன் ரோகித் ஷர்மாவும் விளையாடமாட்டார் என்ற நிலை உருவானது.
முகமது ஷமி ஏற்கனவே காயத்தால் விலகிவிட்டார். முதல் டெஸ்ட் போட்டியுடன் விராத் கோலி நாடு திரும்பிவிடுவார் என்று பலவித சிக்கல்கள்.
முதல் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் நம்பிக்கையளித்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கே ஆட்டமிழந்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் கேவலமாக தோற்றது.
ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யாருமே எதிர்பாராத வண்ணம் எழுச்சியடைந்து, ரஹானேவின் அருமையான கேப்டன்சியில், ஜடேஜா உள்ளிட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால், அதே 8 விக்கெட்டுகளில் வென்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட்டில் மேலும் சில வீரர்கள் காயமடைந்தனர். உமேஷ் யாதவ் விலகினார் மற்றும் ஜடேஜாவால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச முடியவில்லை. விஹாரி, அஸ்வின் மற்றும் பன்ட் உள்ளிட்ட வீரர்களுக்கு காயம். பும்ராவுக்கும் காயம். ஆனாலும், வெற்றிக்கு 407 ரன்கள் தேவை என்ற நிலையில், நம்பவே முடியாத வகையில் ஆடி, அப்போட்டியை டிரா செய்து, ஆஸ்திரேலிய வீரர்களை வாழ்க்கையையே வெறுக்கச் செய்தது.
மேலும், சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணியின் சிராஜ், பும்ரா உள்ளிட்ட வீரர்கள் நிறவெறி வசைபாடலுக்கு உள்ளானார்கள். இதுதவிர, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே உள்ளிட்டவர்களால், இந்திய பேட்ஸ்மென்கள் தொடர் ஸ்லெட்ஜிங் நடவடிக்கைகளுக்கு ஆளானார்கள்.
மேலும், சிட்னி டெஸ்ட்டிற்கு முன்பாக, இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறினார்கள் என்று, ரோகித் ஷர்மா உள்ளிட்ட சிலர் எச்சரிக்கப்பட்டார். இப்படி பலவகையில் இந்திய வீரர்களின் மனஉறுதியை சிதைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இவை அனைத்தையும் மீறித்தான் சிட்னி டெஸ்ட் டிரா ஆனது. ஆனால், இந்த டிராவை, மாபெரும் வெற்றி என்றே பலரும் கொண்டாடினார்கள்.
இப்போது நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கு வருவோம். இதுதான் இருப்பதிலேயே மோசம். இந்திய அணியில், அஸ்வின், ஜடேஜா, விஹாரி, பும்ரா உள்ளிட்டவர்கள் இல்லை. முதல் இன்னிங்ஸின்போது பவுலர் சைனிக்கும் காயம்.
புதிய வரவாக ஷர்துல் தாகுர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் இடம்பெற்றனர். சிட்னியிலிருந்து பிரிஸ்பேன் சென்ற இந்திய அணிக்கு, அங்குள்ள ஹோட்டலில் அடிப்படை வசதிகள் கிடைப்பதில்கூட சிக்கல் ஏற்பட்டது. எனவே, பிரிஸ்பேன் போட்டியில், இந்திய அணி தேறுமா? என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. முன்னாள் வீரர்கள் சிலர் மட்டுமே இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கணித்தனர்.
இந்நிலையில், வலுவான ஆஸ்திரேலியாவை பிரிஸ்பேனில் வீழ்த்தி வென்று கண்டு, பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் தக்கவைத்துள்ளது. இப்போது சொல்லுங்கள், இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றிதானே..!