சென்னை

மிழக அரசு வெளியுட்டுள்ள பாடப் புத்தகத்தில் மகாகவி பாரதியார் காவி தலைப்பாகையுடன் உள்ளது போன்ற படம் உள்ளது.

மகாகவி பாரதியார் எப்போதும் தலைப்பாகை அணிந்திருப்பார். அதை தமிழில் முண்டாசு என அழைப்பது வழக்கம். முண்டாசுக் கவி என்றாலே பாரதியார் என்பதை பலரும் அறிவார்கள். பொதுவாக முண்டாசு மற்றும் மீசையை மட்டும் வரைந்தாலே அது பாரதியாரை உருவகப்படுத்தும் என்பது வழக்கமாகும். அவரை பார்த்திராத தலைமுறையினருக்கும் அவருடைய அடையாளம் தலைப்பாகை ஆகும்.

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள 12 ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தின் அட்டையில் பாரதியாரின் உருவகப் படம் அமைந்துள்ளது. அதாவது அந்த புத்தகத்தின் அட்டையில் ஒரு முண்டாசும் மீசையும் வரையப்பட்டுள்ளன. எப்போதும் தூய வெண்மை தலைப்பாகை அணியும் பாரதியின் தலைப்பாகை இந்த புத்தக அட்டையில் காவிக் கலரில் காணப்படுகிறது.

இது பலருக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இது குறித்து அரசுப் பள்ளி தமிழாசிரியர் ஒருவர், ”பாரதியாரை காவி தலைப்பாகையும் வரைவது இதுவே முதல் முறையாகும். நான் பல வருடங்களாக பாடம் எடுத்து வருகிறேன். பாரதியாரின் படத்தை பாடப்புத்தகங்களில் வெள்ளை தலைப்பாகையுடன் மட்டுமே நான் கண்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைசருமான தங்கம் தென்னரசு, “பாரதியாரை காவி தலைப்பாகை அணிந்து எப்போதாவது கண்டுள்ளோமா? இது பாடப்புத்தகங்களை காவி மயமாக்கும் சதித் திட்டமாகும். மாணவர்கள் மத்தியில் பாரதியார் குறித்த மாறுபட்ட எண்ணத்தை புகுத்த அரசு செய்யும் சதி ஆகும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். தமிழக பாட புத்தக ஆணையத்தின் தலைவி வளர்மதி, “பாடப்புத்தகங்கள் காவி மயமாக்கப்படுவதாக கூறுவது மிகவும் தவறான தகவலாகும். இது மாநில அரசால் வழங்கப்பட்ட பாடப் புத்தகமாகும். இதில் அரசியலும் மதமும் கிடையாது. ஆயினும் இந்த புகார் சரியானதாக இருந்தால் கவனிக்கப்பட்டு திருத்தம் செய்யப்படும்” என தெரிவித்தார்.