சென்னை,

திமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சசிகலாவை சந்திக்க பெங்களூர் விரைந்துள்ளார் டிடிவி தினகரன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த டிடிவி தினகரன் பெங்களூர் விரைந்தார். அவர் நாளை சசிகலாவை சந்திப்பார் என கூறப்படுகிறது.

சசிகலா குடும்பத்தினர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசுக்கு கொடுத்த நெருக்கடிகள் காரணமாக எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள் ஒன்றுசேர்ந்து டிடிவியை கட்சியில் இருந்து விலக்குவதாக அறிவித்தனர்.

இதற்கு டிடிவி தரப்பு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாது தமிழக அரசு பணியாற்றி வருகிறது.

இதற்கிடையில் மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட டிடிவி பல்வேறு எச்சரிக்கைகளை எடப்பாடி அணியினருக்கு விடுத்தார்.

என்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து, தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தால், எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை பதவி காலியாகிவிடும். அதிமுகவின் விதிகளை திரித்து கூறுகிறார்கள்,

கட்சி வளர்ச்சிக்கு தேவையான எல்லா நடவடிக்கையும் எடுப்பேன் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து அதிமுகவை காப்பாற்றுவேன் என்று டிடிவி தினகரன் கூறினார்.

ஆனால் டிடிவியின் அறிவிப்புகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் எடப்பாடி அணியினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க சசிகலாவை சந்திக்க பெங்களூர் புறப்பட்டுள்ளார்  டிடிவி தினகரன்.