மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1ந்தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 72 ஆயிரத்து 062 வழக்ககளும், கடந்த ஜூலை 25 நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதி மன்றங்களில் ஒரு கோடியே 59 லட்சத்து 55 ஆயிரத்து 873 வழக்குகளும், நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் 4. 23 கோடி வழக்குகள் என நாடு முழுவதும் 4 கோடியே 83 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என லோக்சபாவில் மத்திய அமைச்சர் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. மேலும், அவசியம் இல்லாமல் ஊழல் வழக்குகளை தள்ளி வைக்கக்கூடாது என்றும், ஊழல் வழக்குகள் நீண்டகாலம் நிலுவையில் இருந்தால், ஊழலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் குற்றம் செய்தவர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றமும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க அறிவுறுத்தியதுடன், தமிழ்நாட்டில் கடந்த 1983 முதல் 2021 வரை நிலுவையிலுள்ள 1635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சத்யநாராயணா பிரசாத் அமர்வில் கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ள நீதிபதி சத்யநாராயண பிரசாத் தெரிவித்துள்ளார்.