சென்னை:
அதிகாலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு கூடிய ‘குடி’ மகன்கள், கடை திறந்ததும், தாங்கள் வாங்கிய மது பாட்டில்கள் உடன் வெற்றிக்களிப்புடன் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துச் சென்றனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று காலை திறக்கப்படும் என நேற்று தமிழக அரசு அறிவித்த உடனே குடிமகன்கள் துள்ளாட்டம் போடத் தொடங்கி விட்டனர்.
மீண்டும் மது கிடைக்கும் என்ற ஆசையில் குடி மகன்கள் துள்ளிக்குதித்து, கடை திறப்பை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பலர் நேற்று இரவே கடை முன்பு பாய் விரிக்கத் தொடங்கி விட்டனர்.
இன்று காலை சென்னை, திருவள்ளூர் மற்றும் கொரோனா தீவிரமாக உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் இன்று காலை அறிவித்தபடி 9 மணிக்கு கடை திறக்கப்பட்டது. முன்னதாக மது வாங்குபவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமாக உள்ள சென்னை மற்றும் திருவள்ளூரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சென்னையைச் சேர்ந்த குடிமகன்கள் அண்டை மாவட்டங்களில் அதிகாலையிலேயே குவியத் தொடங்கி விட்டனர்.
சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான குடி மகன்களின் கூட்டம் அலைமோதியது. காஞ்சீபுரத்தில் உள்ள ஊத்துகாடு கிராமத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் ஒயின் கடையில் வழங்கப்பட்ட டோக்கன்களுடன் காத்திருக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று அங்குள்ள 84 கடைகள் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. பல கடைகள் முன்பு அதிகாலை 5 மணி முதலே ஏராளமானோர் வரிசையாக திரண்டிருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு காலை 10 மணிக்கு மது விற்பனை தொடங்கியது.
திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு டாஸ்மாக் கடை முன்பு தனிமனித இடைவெளியை பின்பற்றி குடையுடன் காத்திருக்கும் குடிப் பிரியர்கள் மது பாட்டில்களை வாங்க வெயிலிலும் கவலையின்றி வரிசையில் நின்றிருந்தனர்.