மன்னார்குடி:

ன்னார்குடியைச் சேர்ந்தவர் முன்னாள் திமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணன். இவரது பேரன் டாக்டர் இளஞ்சேரன். இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இளவரசியின் உறவினர்.

இளஞ்சேரன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும்  மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மகள் திவ்யா (வயது25) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு  இரண்டரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.

இளஞ்சேரன் – திவ்யா

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு திவ்யா வீட்டில் படுக்கை அறையில் மயங்கி நிலையில் கிடந்தார்.  அவரை, இளஞ்சேரனின் உறவினர்கள் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.  அங்கு திவ்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திவ்யாவின் தலை மற்றும் உடலில் சிறு காயங்கள் இருந்ததாக தெரியவருகிறது.

இதுகுறித்து திவ்யாவின் அண்ணன் பிரேம்குமார், மன்னார்குடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதில் தனது தங்கை திவ்யாவை அவரது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்தினர். இறந்த திவ்யாவுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்களே ஆவதால் மன்னார்குடி உதவி  ஆட்சியர் செல்வசுரபி மேல் விசாரணை நடத்தினார்.

விசாரணைக்குப் பிறகு, திவ்யாவின் கணவர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோர் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல், சாவுக்கு காரணமாக இருத்தல் ஆகிய இரு  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், மூவரையும் கைது செய்து மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

பிறகு மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சிறையில் உள்ள மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக போலீஸ் தரப்பில் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து  இளஞ்சேரன், முத்தழகன், ராணி ஆகியோர் நீதிபதி விஜயன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது  மூவரையும் இரண்டு நாட்கள் போலீஸ் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

திவ்யாவின் மாமனார் முத்தழகன், –
கணவர் இளஞ்சேரன் – திவ்யா – மாமியார் ராணி

இதைத் தொடர்ந்து மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முத்தழகன் அளித்த வாக்குமூலத்தில், எனது மகன் மருத்துவமனை கட்ட பணம் தேவைப்பட்டது. எனவே திவ்யாவை கொலை செய்து விட்டு எனது மகனுக்கு வேறு திருமணம் செய்தால் பணம் கிடைக்கும் என்பதால் திவ்யாவை கொலை செய்தோம். அதற்கு ராணி, அவருடைய தம்பி திருவாரூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சிவக்குமார், அவரது நண்பர் கரூரை சேர்ந்த செந்தில் ஆகியோர் உடந்தையாக இருந்தார்கள் என்று தெரிவித்தார்.

 

இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி திவ்யாவின் மாமனார் முத்தழகன், மாமியார் ராணி, கணவன் இளஞ்சேரன், ராணியின் தம்பி சிவக்குமார் மற்றும் சிவக்குமாரின் நண்பர் செந்தில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.  ஏற்கனவே முத்தழகன், ராணி, இளஞ்சேரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய குத்தாலத்தை சேர்ந்த சிவக்குமார், அவரது நண்பர் செந்தில் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் சிவக்குமார் அளித்த வாக்குமூலத்தில் “திவ்யாவை கொலை செய்வதற்காக முத்தழகன் ரூ.2 லட்சம் தருவதாக கூறி அதில் முன்பணமான ரூ.1 லட்சத்தை என்னிடம் அளித்தார்.  நான் ரூ.10 ஆயிரத்தை செந்திலிடம் தந்தேன்.  பின்னர் திவ்யாவை நான், செந்தில், முத்தழகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்தோம்” என்று தெரிவித்தார்.

செந்தில் அளித்த வாக்குமூலத்தில்,” நான் மயிலாடுதுறையில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருந்த போது தான் சிவக்குமாருடன் எனக்கு  அறிமுகம் ஏற்பட்டது. இந்தநிலையில் திவ்யாவை கொலை செய்தால் ரூ.1 லட்சம் தருவதாக சிவக்குமார் என்னிடம் கூறினார். பணத்திற்கு ஆசைப்பட்டு கொலை செய்து விட்டேன். பிறகு  திவ்யாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை நான் எடுத்து சென்றேன்” என்று தெரிவித்து்ள்ளார்.