சென்னை:
இரு சகோதரர்களும், சாலையில் நின்ற ஒரு ஆட்டைத் திருட முயன்றபோது கையும் களவுமாக சிக்கினர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, வி. நிரஞ்சன் குமார் (வயது 30) அவரது சகோதரர் லெனின் குமார் (32) ஆகியோர் ஆடுகளை திருடி வந்ததை அடுத்து மாதவரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து ஆடுகளைத் திருடி ஒவ்வொன்றையும் சுமார் 8,000-க்கு விற்றனர். சாலையோரங்களில் மேய்ச்சலில் இருக்கும் ஆடுகளைத் தேடி அவர்கள் செங்கல்பட்டு, மாதவரம், மீஞ்சூர் மற்றும் பொன்னேரி ஆகியவற்றின் வெறிச்சோடிய கிராமப்புறங்களை சுற்றி வந்திருக்கிறார்கள்.
யாரும் இல்லை என்றால், சகோதரர்கள் இருவரும் ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை விரைவாக, தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு, வேகமாக ஓடுவார்கள். இப்படி பல இடங்களில் இந்த திருட்டை செய்திருக்கிறார்கள். ஒரு மந்தையிலிருந்து ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் திருடக்கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருந்திருக்கிறார்கள்.
இதன் விளைவாக, ஒரு ஆடு அல்லது இரண்டு ஆடுகள் காணாமல் போவது குறித்து போலீசில் புகார் செய்ய யாரும் முன்வரவில்லை. அக்டோபர் 9-ஆம் தேதி மாதவரத்தின் பழனியிடம் ஒரு ஆட்டைத் திருடியபோது சகோதரர்களின் குட்டு வெளிப்பட்டிருக்கிறது. பழனிக்கு அரை டஜன் ஆடுகள் மட்டுமே இருந்தன, அதனால் ஒரு ஆடு காணாமல் போனதும் அவர், காவல் நிலையத்தை அணுகியிருக்கிறார்.
காவல்துறையினர் அப்பகுதியில் சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்தபோது திருடர்கள் ஒரு காரில் வந்திருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால் காரின் பதிவு எண் தெரியவில்லை. அவர்கள் நடத்திய விசாரணையின் போது, அப்பகுதியில் நிறைய பேர் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை இழந்ததை, மாதவரம் போலீசார் கண்டுபிடித்தனர். எனவே காவல்துறையினர் இதனை கண்காணிப்பதற்காக அங்கு பணியாளர்களை நிறுத்தினர். சனிக்கிழமையன்று, இரு சகோதரர்களும், சாலையில் நின்ற ஒரு ஆட்டைத் திருட முயன்றபோது கையும் களவுமாக சிக்கினர்.
இரு சகோதரர்களின் தந்தை விஜய் சங்கர், தனது மகன்களை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்து ‘நீ தான் ராஜா’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். பணம் இல்லாததால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மகன்கள் உதவ முன் வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ஆடு உரிமையாளர்களிடம், படப்பிடிப்புக்கான இடங்களை தேடுவதாகவும், இரண்டு ஆடுகளை ஒரு கம்மி விலைக்கு விற்கும்படி இனிமையாகப் பேசியிருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டை இழந்தால் மக்கள் புகார் செய்ய மாட்டார்கள் என்றும், அவர்கள் செய்தாலும் கூட இதுபோன்ற வழக்குகளை காவல்துறையினர் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் நம்பி அவர்கள் திருடச் சென்றுள்ளனர். இருவரும் இப்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.