டெல்லி: சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த கடந்த 8ஆண்டுகளில் ரூ.1488 கோடி செலவு செய்துள்ளதாகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.74 கோடி மட்டும் செலவு செய்துள்ளதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்விக்கு பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சுமாஷ் சர்க்கார் பதில் தெரிவித்துள்ளார்.
உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவின் தொன்மையான மொழி சமஸ்கிருதம் என வடமாநிலத்தவர்கள் கூறி வருகின்றனர். இதனால் மத்தியஅரசு, சமஸ்கிருதத்தை மக்களிடம் கொண்டு மொழியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த 2020ம் ஆண்டு சமஸ்கிருத வளர்ச்சிக்கு நிதிஒதுக்கீடு செய்துள்ளதாக தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், கடந்த 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான கடந்த 3 வருடங்களில் சமஸ்கிருதத்தை மக்களிடம் கொண்டு செல்ல ரூ.643.84 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
சமஸ்கிருதத்திற்காக கடந்த 2017-18ம் ஆண்டில் ரூ.198.31 கோடியும், 2018-19ம் ஆண்டில் ரூ.214.38 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூ.231.15 கோடியும் செலவிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு மத்திய அரசு செலவு செய்த தொகையை விட 29 மடங்கு அதிகம்.
இந்த நிலையில், நடைபெற்று முடிந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கரூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி இதுதொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் சுமாஷ் சர்க்கார், கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1488 கோடியும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.74 கோடியும் ஒதுக்கி உள்ளது என தெரிவித்து உள்ளார்.