மும்பை
மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பெண் தான் வேலையில் இல்லை என பொய் சொல்லி அதிக ஜீவனாம்சம் கேட்டதை அவர் வேலையில் இருப்பதாக அவர் கணவர் நிரூபித்துள்ளார். அது மட்டுமின்றி தன் வழக்கறிஞரின் தாய் இறந்துவிட்டதாகவும் பொய் சொல்லி உள்ளார்.
கடந்த 2014 நவம்பர் மாதம் ஒரு பெண் தன் கணவர் மீது தொடுத்த ஜீவனாம்ச வழக்கில் கணவர் மாதத்துக்கு ரூ,25000 என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அந்த மனைவி தற்போது தனது முன்னாள் கணவர் வெளிநாட்டில் பணி புரிந்து மாதத்துக்கு ரூ. 15 லட்சம் ஊதியம் பெறுவதாகவும், பணியில் இல்லாத தனக்கு ரூ. 3 லட்சம் மாதாமாதம் தரவேண்டும் எனவும் மீண்டும் வழக்கு தொடுத்திருந்தார்.
அதற்கு பதில் மனுவை அந்தக் கணவர் அளித்துள்ள நிலையில் விசாரணைக்கு இந்த மனு வந்தது. அப்போது அந்தப் பெண் தனது வழக்கறிஞரின் தாய் இறந்து விட்டதால் வழக்கை 15 நாட்களுக்கு தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் அதே நீதிமன்றத்தில் அந்த வழக்கறிஞர் வந்து விட்டார். விசாரித்ததில் அந்தப் பெண் சொன்னது பொய் என தெரிந்தது.
அதனால் கோபம் அடைந்த நீதிபதி அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். பின் அந்த முன்னாள் கணவரின் மனுவை விசாரித்த நீதிபதிக்கு அவர் பணியில் இல்லை என சொன்னதும் பொய் என்று தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்ணின் வருமான வரிக்கணக்கை சமர்ப்பித்ததில் அவர் மாதத்துக்கு ரூ. 50000-60000 வருமானம் வருவதை நீதிமன்றத்தில் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது,
நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். தீர்ப்பில், “இந்தப் பெண் வழக்கில் வெற்றி பெறுவதற்காக நீதிமன்றத்தில் எந்த ஒரு தவறான தகவலையும் தர தயக்கமில்லாதவர்” என குறிப்பிட்டுள்ளார்.