காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் போது, சமரச தூதுவராக தாம் செயல்பட வேண்டும் என இம்ரான் கான் கேட்டுக்கொண்டதால், அவ்வாறே செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் இடையே இருக்கும் காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட உள்ளதாக அறிவித்திருக்கிறார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “என்னால் உதவ முடியுமெனில், நிச்சயமாக தூதுவராக செயல்படுகிறேன். என்னுடைய உதவி தேவைப்பட்டால், எனக்கு தெரியப்படுத்தலாம். பிரதமர் மோடியும் என்னிடம் காஷ்மீர் விவகாரத்திற்கு சுமூக தீர்வு ஏற்படுத்த உதவும் படி கேட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
இத்தகைய சூழலில், ”காஷ்மீர் விவகாரத்தில் பொய்யரான டிரம்பை இந்தியா அழைக்க விரும்புகிறதா ? மத்திய அரசின் நிலைபாட்டில் ஏதேனும் மாற்றம் உள்ளதா ? அல்லது, மூன்றாம் தரப்பு ஏதேனும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறதா” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஓமர் அப்துல்லா கேள்வி எழுப்பியிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.