பீஜிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரிப்பார் என சீன அரசு செய்தி ஊடகமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.  அத்துடன் காஷ்மீர் பகுதியை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.  அப்போது முதல் இந்தியா மீது பாகிஸ்தான் கடும் அதிருப்தியைத் தெரிவித்து வருகிறது.   மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் இந்தியாவுக்கு சொந்தமானது என அப்போது அறிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் சீன பாகிஸ்தான் பொருளாதாரச் சாலை அமைக்கச் சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.   இதற்காக 6000 கோடி டாலர் திட்டத்தில் சீனா அமைத்துள்ள திட்டத்துக்கு தற்போது இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.   காஷ்மீரில் தற்போது மக்கள் விருப்பத்துக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளதாகச் சீனா உள்ளிட்ட பல நாடுகளிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வந்து சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் மோடியுடன்  பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.   அப்போது இந்தியாவின் சார்பில் காஷ்மீர் பகுதி இந்தியாவைச் சேர்ந்தது எனவும் இந்த விவகாரத்தில் வேறு எந்த நாடும் தலையிடுவது தவறானது எனவும் விளக்க உள்ளதாக இந்திய அதிகாரிஒருவ்ர் தெரிவித்துள்ளார்

நேற்று சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான ஜின்ஹுவா, “காஷ்மீரில் தற்போதுள்ள நிலை குறித்து சீன அதிபர் நெருக்கமாகக் கண்காணித்து வருகிறார்.  அவரிடம் பாகிஸ்தான் அங்குள்ள நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளது.   எனவே காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது ஆதரவை அளிப்பார்” எனத் தெரிவித்துள்ளது.