டில்லி

ந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் இருந்து பலர் விலகி வருவதால் 18% மட்டுமே தொடர உள்ளதாகவும் அதிலும் 36% பேர் பயன்பாட்டைக் குறைக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

உலக அளவில் முகநூல் நிர்வாகத்தின் வாட்ஸ்அப் செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர்   இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வரை பயன்படுத்தி வந்தனர்.  இந்த செயலி மூலம் தனிப்பட்ட மற்றும் வர்த்தக தகவல்கள் பெருமளவில் பகிரப்படுகின்றன.  இந்நிலையில் வாட்ஸ்அப் செயலி தனது கொள்கையில் மாறுதல்கள் அறிவித்தது.  அதன்படி வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் தகவல்கள் முகநூலில் சேர்க்கப்பட்டு வேண்டுவோருக்கு அளிக்கப்பட உள்ளதாகத் தெரிய வந்தது.

இந்த புதிய கொள்கை பிப்ரவரி 8 முதல் அமலாக உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.  அதன் பிறகு அந்த காலக்கெடு மே 15 ஆக நீட்டிக்கப்பட்டது.   இந்த செயலி எந்த ஒரு விவரங்களையும் வெளியிடாது என நிர்வாகம் உறுதி அளித்தது.  ஆயினும் இந்த செயலியில் பயனாளர்கள் தங்களின் சொந்த விவரங்கள் பலருக்கும் பகிரப்படலாம் என அச்சம் கொண்டனர்.   இதையொட்டி பலரும் சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாறக் தொடங்கினர்.

இந்தியாவில் 244 மாவட்டங்களில் நடந்த கணக்கெடுப்பில் வாட்ஸ்அப் பயனாளர்களில் ப்லர் விரைவில் இதில் இருந்து விலக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  இந்த கணக்கெடுப்பின்படி விரைவில் தற்போதுள்ள பயனாளிகளில் 18% பேர் மட்டுமே வாட்ஸ்அப் செயலியில் தொடர உள்ளனர்.  இதிலும் 36% பேர் பயன்பாட்டை குறைக்க உள்ளனர். மேலும் சுமார் 24% பேர் உடனடியாக மற்ற செயலிகளுக்கு தங்கள் குழுக்களை மாற்ற உள்ளனர்.

முக்கியமாக இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 91% பேர் தாங்கள் வாட்ஸ்அப் பேமெண்ட் எனப்படும் பணப்பரிவர்த்தனையைத் தொடரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.  இதற்குக் காரணம் அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்கப் பயப்படுவதாகக் கூறி உள்ளனர்.   வாட்ஸ்அப் செயலியில் புதியதாக இணையவும் பலர் பயந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 1 முதல் 5 வரை சிக்னல் செயலி தரவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை 24,000 ஆக இருந்தது.  ஆனால் ஜனவரி 6 முதல் 10 ஆம் தேதி வரை 23 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.  இதைப்போல் டெலிக்ராம் செயலியின் தரவிறக்கமும் இந்த கால கட்டத்தில் 13 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்ந்துள்ளது.   ஏற்கனவே உள்ள வாட்ஸ்அப் பயனாளர்களில் சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் விலகி வருகின்றனர்.