டில்லி
நாட்டில் 42000 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை எனவும் 15000 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை எனவும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறி உள்ளார்.
பாஜக ஆட்சியில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் அனைத்து ஊர்களிலும் அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் 5 மாநில தேர்தல் பிரச்சாரங்களில் பாஜகவினர் இதை தங்கள் அரசின் சாதனை எனத் தெரிவித்து வருகின்றனர். இந்த வசதிகள் அனைத்து பள்ளிகளிலும் அளிக்கப்பட்டுள்ளதா என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், “இது குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் மையம் விவரங்கள் அளித்துள்ளது. கடந்த 2018-19 ஆம் ஆண்டு வரை நாட்டில் 10,83,747 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 10,41,327 பள்ளிகளில் மட்டுமே குடிநீர் வசதியும் 10,68,726 பள்ளிகளில் மட்டுமே கழிப்பறை வசதியும் உள்ளது.
இதையொட்டி அரசு அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதிகளைச் செய்து தரக் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் அனைத்து பள்ளிகளிலும் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் அமைத்துத் தரவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது” எனப் பதில் அளித்துள்ளார்.