அகமதாபாத்: குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு குஜராத்தில் பள்ளிக் குழந்தைகள் வற்புறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் ஓயவில்லை. ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந் நிலையில், குஜராத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடிதங்களை பிரதமர் அலுவலகத்திற்கு எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முத்தலாக் சர்ச்சையின் போதும் அவர்கள் இவ்வாறு பணிக்கப்பட்டனர். ஆனால், குஜராத் அரசாங்க அதிகாரிகள் இதுபோன்ற எந்தவொரு அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை என்று மறுத்துவிட்டனர்.

ஆனால் உள்ளூர் பாஜக பிரமுகர்களால் இந்த வலியுறுத்தல் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வகுப்பறைகளில் கரும்பலகையில் எழுதப்பட்ட உரையை நகலெடுக்க பள்ளி குழந்தைகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் குறைந்தது 50 அஞ்சல் அட்டைகளை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்புவதை உறுதி செய்யுமாறு பாஜகவினர் வலியுறுத்துகின்றனர்.

குஜராத்தில், குடியுரிமை குறித்த அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற தடை அமலில் இருப்பதாக தெரிகிறது.