சென்னை:

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக.வில் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே அதிகாரப் போர் இலை மறைவு காய் மறைவாக நடந்து வருகிறது. இருவரில் யாரை ஆதரிப்பது என்று தெரியாமல் அதிமுகவினர் தவித்து வரும் நிலையில், இதே குழப்பம் தி.மு.க.விலும் நிலவுகிறது

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது கனிமொழி, ராஜாத்தியம்மாள் ஆகியோர் அங்கு சென்றனர். மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்து பேசிவிட்டுத் திரும்பினார்.

ஜெயலலிதா வீடு திரும்பியதும் அவரை சந்திக்க கனிமொழி தரப்பு தயாராக இருந்தது. இது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஜெயலலிதா இறந்ததும் முதல்வராக பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். படிப்படியாக கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும், முதல்வர் பதவியையும் கைப்பற்ற சசிகலா தரப்பினர் தற்போது வரை முயற்சித்து வருகின்றனர்.

சசிகலா தரப்பு ஆதரவு கனிமொழிக்கு இருக்கிறது. இதனால் சசிகலா மீது ஸ்டாலினுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் சசிகலா முதல்வராக வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால் திமுக.வில் கனிமொழியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற அச்சம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஸ்டாலின் தொடர்ந்து சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் சட்டமன்றத்தில் சசிகலா குறித்து பேசியதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஸ்டாலின் முழு ஆதரவு கொடுத்து வருகிறார். சட்டசபையிலும் பன்னீர்செல்வத்துக்கு முழு மரியாதை அளிப்பதோடு ஆளும்கட்சிக்கு எந்த விதத்திலும் நெருக்கடி கொடுக்காமல் இருந்து வருகிறார் ஸ்டாலின்.

ஆனால், இதற்கு நேர்மாறாக கனிமொழி டெல்லியில் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இவர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக செயல்படும் தம்பிதுரையுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.