டில்லி

ரம் நடுவதை ஊக்குவிக்க டில்லியில் உள்ள குருத்வாராக்களில் பிரசாதமாக மரக்கன்று அளிக்கப்படுகிறது.

பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்களுக்கு அனைத்துக் கோவில்களிலும் பிரசாதம் வழங்குவது நீண்ட நெடுங்கால வழக்கமாகும். இந்த பிரசாதங்கள் ஒவ்வொரு கோவிலிலும் மாறுபடும். ஆனால் அதை வாங்குவது  மிகவும் புண்ணியத்தைத் தரும் என பக்தர்கள் நம்பி வருகின்றனர். அவ்வகையில் டில்லியில் உள்ள சீக்கியர்கள் வழிபாட்டுத் தலமான குருத்வாராக்களில் புதுமையான பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

நாடெங்கும் தற்போது மழையின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய கரணம் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பல பெரிய மரங்கள் கட்டுமானம் மற்றும் சாலைப்பணிகளுக்காக வெட்டப்படுகின்றன. ஆனால் அதற்குப் பதிலாக புதிய மரங்கள் நடுவது இல்லை. இதனால் தற்போது மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து அதனால் மழை இன்மை, சுற்றுச் சூழல் கேடு ஆகியவை உண்டாகிறது.

இதையொட்டி டில்லி மாணவர்கள் ஒவ்வொருவரும் இந்த வருடத்திலிருந்து வருடத்துக்கு 10 மரங்கள் நடவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மாணவர்களின்  பாடத் திட்டத்தில் ஒன்றாகக் கருதப்பட்டு மதிப்பெண்கள் அளிக்கப்பட உள்ளது. கல்வித் திட்டத்தில் இந்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. மாணவர்கள் தற்போது மரம் நடுவதில் பெரும் அக்கறை காட்டி வருகின்றனர்.

சீக்கியர்கள் நடத்தும் பல பள்ளிகள் டில்லியில் இயங்கி வருகின்றன. இந்த பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் சீக்கிய சமூகத்தினருக்கும் மரம் நடுவதில் ஆர்வத்தை ஏற்படுத்த டில்லி குருத்வாராக்கள் குழு திட்டமிட்டது. அதன்படி  ஒவ்வொரு குருத்வாராக்களிலும் பிரசாதமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன, மேலும் தற்போது குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை இந்த குழு நடத்தி உள்ளது.