டில்லி
உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 புனித நகரங்களை இணைக்கும் சாலை திட்டத்தில் 31 மாதங்களில் 1.1 கிமீ தூரத்துக்கு மட்டும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்துக்களின் 4 புனித நகரங்கள் அமைந்துள்ளன அவை கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார் நாத் ஆகியவை ஆகும். இந்த நான்கு நகரங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது. சுமார் 889 கிமீ தூரம் தற்போது ஒருவழிச் சாலை அமைந்துள்ளது. அதை இருவழி சாலையாக மாற்ற திட்டம் தீட்டப்பட்டது.
இந்த திட்டத்தை பிரஹ்டமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். சார் தாம் சாலைத் திட்டம் என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில் 10 மீட்டர் அகலம் கொண்ட இருவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு அனைத்து பருவங்களிலும் மக்கள் இங்கு வசதியுடன் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டது
இந்த 889 கிமீ தூர சாலை மொத்தம் 53 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இதில் முதல் கட்டத்தில் 589 கிமீ தூரத்துக்கு 34 பிரிவுகள் உள்ளன. இரண்டாம் கட்ட பிரிவுகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளால் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த முதல் கட்டத்தில் சில பிரிவுகளுக்கான ரூ.11,700 கோடிக்கான திட்டத்துக்கான அனுமதி கடந்த 2019 மார்ச் வரை வழங்கப்பட்டு அது 2020 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி வழங்கப்பட்டதில் 1.1 கிமீ தூரம் வரை மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ141 கோடி செலவானதாக காட்டப்பட்டுள்ளது. இதே வேகத்தில் வேலை நடந்தால் 2020 மார்சுக்குள் மீதமுள்ள தூரம் முடிக்கப்பட முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்த பிரிவுகளைத் தவிர மற்ற எந்த பிரிவுகளுக்கும் இன்னும் அரசின் பல துறைகள் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.