“ வங்காளிகள்” என்றழைக்கப் படும் மேற்குவங்க மக்களிடமிருந்து மீனைப் பிரிக்க முயலும் ஹிந்துத்வா கட்சியான பாஜக வின் முயற்சி அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
2014 ல் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்ததிலிருந்து இந்தியா முழுவதும் ஹிந்துத்துவாவின் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடத் துவங்கி விட்டது. பசு பாதுகாப்பு எனும் போர்வையில் முஸ்லீம்களைக் கொன்று வருகின்றனர். நேற்று ராஜஸ்தானில், மாடுகளை ஏற்றிச் சென்ற வண்டியிலிருந்து அர்ஜுன் எனும் ஒரு இந்து ஒருவரை மட்டும் அமைதியாய் அனுப்பிவிட்டு, மீதமுள்ள முஸ்லிம்களைக் கடுமையாகத் தாக்கியதில் ஒரு முஸ்லிம் மரணமடைந்தார். இவ்வாறு எல்லா மாநிலங்களிலும், கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன் படுத்தி மக்களைப் பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதில் பாஜக திட்டமிட்டு காய்நகர்த்தி வருகின்றது.
இதே பாணியில், தற்போது சமூகவலைத்தளங்கள் மூலம், தாகூர் மற்றும் மீன் உணவைக் குறிவைத்து மோசமாகக் கருத்து திணிப்பை மேற்கொண்டு வருகின்றது.
மீன் இல்லாமல் வங்காளிகள் இல்லை என்று சொல்லுமளவிற்கு மேற்கு வங்க மக்களின் உணர்வுடனும் உணவுடனும் ஒன்றிணைந்தது மீன்.
இன்றைய பாஜகவின் தாய்க்கழகமான ஜன சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான எஸ்.பி.ஜெய்ஸ்வால் முகர்ஜி, கன்யக்குப்ஜ பிராமணர்(Kanyakubja Brahmin) ஆவார். அவரது பூர்வீகம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்னோஜ் ஆகும். அவர் தினமும் காலை, மதியம் மற்றும் இரவு சாப்பிட தொடங்கும் முன், தனது பூணூலைப் பற்றிக்கொண்டு, சில மந்திரங்களைச் சொல்லி முடித்தபின் அசைவ உணவுகளை நன்கு( திரைபடங்களில் நடிகர் ராஜ்கிரண் உண்பது போல் ) ஒரு பிடி பிடிப்பார்.
எனது தாத்தா சுத்த சைவ உணவு உண்பவர்களை பகுத்தறிவற்ற மனிதர்கள் என்பார். சுத்த சைவ உணவு உண்பவர்கள், உடல் ஆரோக்கியத்திற்கு, மூளை வளர்ச்ச்சிக்கும் வகை செய்யும் அசைவ உணவுகளை உண்ணாமல் சுய தண்டனை கொடுத்துக் கொள்கின்றார்கள் என நம்பினார். ஹில்சா மீன் குழம்பின் சாறைப் பருகினால் மூளை வளரும் எனக் கூறி என்னை அடிக்கடி சாப்பிடச் சொல்லுவார்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் ஒமேகா -3 அதிகமாக இருக்கும் கடல் உணவுவகைகள் மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை மனித மூளை வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது ஒரு அறிவியல் உண்மை ஆகும்.
வங்காளிகளின் உணவுப்பட்டியலில் மீன் ஒரு நிரந்தர உருப்படியாக உள்ளதால் நினைவாற்றல் மற்றும் மூளை தொடர்பான சில நோய்கள் வங்காளிகளிடையே மிகவும் குறைவாக உள்ளன.
பிஜேபி-ன் இந்துத்துவ உணவு அரசியல் சமூக ஊடக பிரச்சார வழியாக வங்காளம் அடைந்துவிட்டது. வங்காளிகளால் வெகுவாக விரும்பப்படும் உணவான “மீன்” மீது பாஜக தன் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது.
கடந்த ஆறு மாதங்களாக ,வங்காளி மொழியில் மீன் சாப்பிடுவதை இழிவுப் படுத்தும் வாசகங்கள் அடங்கிய “மீம்ஸ்” எனப்படும் பரிகாசத் தகவல்படங்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஏராளமான இடம்பெற்று வருகின்றது. அவை மழையின்போது தோன்றும் ஈசல் போல் எல்லா இடங்களிலும் நிரம்பி வழிகின்றது. இவ்வாறான தகவலைப் பரப்புபவர்கள் யார் அவர்களின் சித்தாந்தம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க சிறப்புத் துப்பறியும் திறனோ, ஏழாம் அறிவோ தேவையில்லை.
ஏற்கனவே, வங்காளத்தின் கிராமப் புறங்களில், குஜராத், மகாராஷ்திரா,உத்தரப்பிரதேசத்தில் உள்ளது போல் “பசுபாதுகாப்புபடையினர் எனும் பெயரில் ஜாதிக் கலவரங்களும் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுவதாய் செய்திகள் வரத் துவங்கிவிட்டன.
வங்காளத்து கிராமப்புறங்களில் ஹிந்துத்வ அமைப்புகளின் பெரு நிதியுதவியுடன் மதம் மற்றும் சாதி என்ற பெயரில் மக்களைப் பிளவு படுத்துவது அதிகரித்து வருகின்றது.
இதுகுறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். அவர் இந்த விஷப் பிராச்சரத்தை நிறுத்தவோ எதிர்க்கவோ விரும்புகிறார்.
பாஜகவின் “டிரால் ஆர்மி” எனப்படும் சமூக ஊடகப் பிரச்சார கைக்கூலிகள் சமூக ஊடகத்தின் பல பக்கங்களில் பரவியுள்ளனர். அவர்களின் விஷமப் பிரச்சாரங்களில் ஒன்று “ கவிஞர் மைக்கேல் மதுசூதன் தத்தாவின் எழுத்துக்களைத் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரி “மீம்ஸ்” தயாரித்து பரப்பி வருகின்றனர். அதற்குக் காரணமாய் அவர்கள் கூறுவது, கவிஞர் மைக்கேல் கிறித்துவ மதத்திற்கு மாறியவர், ஒரு வெளிநாட்டு பெண்ணைத் திருமணம் செய்துக்கொண்டார் மற்றும் ‘இராமரை அவமதித்தார்’ என்பதாகும்.
ரவீந்திர நாத் தாகூர் ஒரு ‘குணங்கெட்டவர் ,’ இந்து மத எதிர்ப்பாளர்’ மற்றும் “மதசார்பின்மைவாதிகள் மற்றும் ஆங்கிலேயரின் கைக்கூலி” எனவும் குறிப்பிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மறுபுறம், வங்காளத்தை நினைத்து ‘வந்தே மாதரம்’ எழுதியவரான பக்கிம் சந்திர சட்டோபாத்யாய் அவர்களை உண்மையான இந்து எனப் புகாழரம் சூட்டுவதோடு இல்லாமல் அவருக்கு ‘நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும்’ என்றும் கூறி வருகின்றனர்.
நோபல் பரிசுகள் தொடங்கப் படுவதற்கு முன்னரே கவிஞர் பக்கிம் இறந்து விட்டார் எனும் உண்மையை வசதியாகப் புறக்கணித்துவிட்டு அவர் இந்து மதம்குறித்த உண்மைகளைப் பேசியதால் தான் அவருக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதாகவும் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பொய்யைச் சொல்லும் இவர்கள், தூங்கும் வங்காள இந்துக்களே விழித்தெழுங்கள் இந்து வங்காளிகளின் உண்மையான வரலாற்றைத் தெரிந்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவது தான் பாஜக பித்தலாட்டத்தின் உச்சம்.
இப்பொழுது “அனைத்திந்திய மீன் பாதுகாப்புக் குழு” எனும் பெயரில் ஒரு புதிய அமைப்பு, மீன் சாப்பிடும் வங்காளைகளை மிரட்டி மீம்கள் தயாரித்து பரப்பி வருகின்றது.
இந்து புராணங்களின்படி, விஷ்ணுவின் பத்து அவதாரங்களை ஒன்றான மத்ஸ்ய அவதாரத்தைக் குறிப்பிட்டு மீன் சாப்பிடுபவர்களை அச்சுறுத்தி வருகின்றது.
இவை வங்காளிகளின் நகைப்புக்கிடமான ஒன்றாய் மாறிவிட்டது. இந்த அச்சுறுத்தலை உதாசீனப்படுத்தும் வங்காளிகள், “இந்த மீம்களில் உள்ள வெள்ளியாய் மின்னும் ஹில்சா மீனைப் புகையில் சுட்டு சாப்பிட்டால் சுவையாய் இருக்கும் எனப் பின்னூட்டம் இட்டு நகர்கின்றனர்.
ஆனால் இந்த நகைச்சுவைக்கும் அப்பால், வங்காளத்தின் கிராமப்புறங்களில் தீவிர – மற்றும் வருந்ததக்க சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே, வங்காளிகள், பாஜக எனும் ஒரு மதவாத அரசியல் கட்சியை எதிர்த்துப் போராடுவதோடு இல்லாமல் பழமைவாத இந்துஸ்தான் – பசு பாதுகாப்பு கலாச்சாரத்தின் தாக்குதலிலிருந்து வங்காளதின் தாராளவாத கலாச்சாரத்தையும் தக்கவைத்துக்கொள்ளவும் போராட வேண்டியுள்ளது.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், கடந்த சனிக்கிழமை அன்று நடந்த கருத்தரங்கில் பேசிய மேற்குவங்க மாநில பாஜக தலைவரும் காரக்பூர் சட்டமன்ற உறுப்பினருமான திலீப் கோஷ், திரிசூலங்கள் மற்றும் வாள் ஏந்தி ஏப்ரல் 5 ம் தேதி ஒரு ராம நவமி பேரணி நடத்தப்படும் என அறிவித்து அதன்படி நடத்தியும் முடித்தார்.
வட இந்தியாவில் உள்ளது போல் மேற்கு வங்காளத்தில் ராம நவமி கொண்டாட்டம் விமரிசையாக்க் கொண்டாடப்படுவதில்லை. சமீபத்தில், திட்டமிட்டு வங்காளத்தில் இறக்குமதி செய்யப்பட்டு ராமர் வழிபாடு மற்றும் கொண்டாட்டம் பிரபலப்படுத்தப் படுகின்றது.
வாள் மற்றும் திரிசூலங்கள் கொண்டு பேரணி நடைபெறுவது வங்காளத்தின் தாராளவாத அடையாளத்திற்கு இழுக்கு ஆகும். சமீபத்தில், தமிழகத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தைப் பயன்படுத்தி பாஜகவினர் காலூன்ற முயன்று வருகின்றனர். பல வருடங்களுக்குப்பின்னர், ஆயுதம் ஏந்தி பாஜகவினர் ஊர்வலம் போக பன்னீர் செல்வம் தலைமைலான அரசு அனுமதியளித்தது, பெரியாரின் தாக்கும் நிறைந்த தமிழக முற்போக்காளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்துஸ்தானி பசு பாதுகாப்பு கலாச்சாரம் மக்கள்மீது திணிக்கப்படும் சூழ்ச்சியாகும்.
வங்காளிகளின் மீது வலிந்து திணிக்கப்படும் இந்து மத அடையாளம் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது. இதனப் பல வங்காளிகள் கடுமையாக எதிர்த்துவருகின்றனர்.
2014 மக்களவைத் தேர்தலில் மோடி அலையில் அசராத இரண்டு மாநிலங்கள் தமிழகமும், மேற்கு வங்கமும் ஆகும். இங்குப் பாஜகவின் வக்குவங்கி 2014ல் 17 சதவிகிதமாக இருந்தது. ஆனால், தற்போது 2016 சட்டமன்றத் தேர்தலில் 10% ஆகக் குறைந்துவிட்டது. சரிந்த வாக்குவங்கியைப் புதுப்பிக்கும் முயற்சியாய் பாஜக சமீபத்தில் அதிக நிதியுதவி செய்து மதத் துவேசப் பிரச்சாரங்களை முடுக்கி விடுள்ளது.
இத்தகைய இந்துத்துவ ஆதரவாளரார்களை எதிர்கொள்ளவும் இந்திய இறையாண்மையைக் காக்கவும் TMC தலைமையின் கீழ் ஒன்றிணைந்துப் போராட இடதுசாரி முன்னணியினர் முன்வர வேண்டுமென மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்காளிகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாமல், மேற்கு வங்க பாஜக தொடர்ந்து மீன் எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பிவந்தால் அந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என உறுதியாகக் கூறலாம்.
மேற்கு வங்கம் சரியாதவரை தான் இந்தியாவும் சரியாது இருக்கும் என வங்காளத்தில் உள்ள முற்போக்கு சக்திகள் உறுதியாக நம்புகின்றன. தமிழர்கள் ஜல்லிக்கட்டிற்காக ஒன்றிணைந்தது போல், தேவைப்பட்டால் வங்காளிகள் மீனிற்காக ஒன்றிணைவார்கள் என்பது திண்ணம்.