துரை

துரை மாவட்டத்தின் மேலூர் பணிமனை அரசு போக்குவரத்து கழக பேருந்தில் கியர் கம்பிக்கு பதில் மரக்குச்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக அரசு பேருந்துகள் பலவற்றில் பலவகை குறைகள் உள்ளது வழக்கமாகி வருகிறது. ஒரு சில தினங்களுக்கு முன்பு படிக்கட்டுகள் உடைந்து இருந்த ஒரு பேருந்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிந்து கடும் சர்ச்சையை உண்டாக்கியது. தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் ஒரு பேருந்து அடுத்த சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இந்த பணிமனையில் உள்ள 53 பேருந்துகளில் பல பேருந்துகள் ஓட்டை உடைசலாக உள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த பேருந்துகள் அடிக்கடி பழுதடந்து நிற்பது இங்குள்ள மக்களுக்கு சகஜமானதாகி விட்டது. பல நேரங்களில் மழைத் தண்ணீர் முழுவதும் பேருந்துக்குள் ஒழுகுவதும் வழக்கமான ஒன்றாகும். தற்போது மிகவும் அபாயகரமான நிலையில் ஒரு பேருந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த பேருந்து மேலூரில் இருந்து சேக்கிபட்டி வரை சென்று வருகிறது. இந்த பேருந்தின் கியர் கம்பி உடந்ததால் ஒரு மரக்குச்சியை பயன்படுத்தி இப்பேருந்தின் ஓட்டுனர் இயக்கி வருகிறார். அத்துடன் ஒவ்வொரு முறையும் மரக்குச்சி கழன்று விடும் அபாயம் உள்ளதால் பயணிகளில் ஒருவர் தொடர்ந்து இந்த குச்சியை பிடித்துக் கொண்டு பயணம் செய்வது வழக்கம் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.