சென்னை

சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் 18 மாதங்களில் மேம்பாலம் கட்டி முடிக்கப்படு என அரசு அறிவித்துள்ளது.

சென்னை நகரின் முக்கிய சாலையான இ.சி.ஆர்.எனும் கிழக்கு கடற்கரை சாலை திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., நீளம் உடையது. இது 60 முதல் 70 அடி அகலத்தில், நான்கு வழிச் சாலையாக உள்ளது.  மேலும் இந்த சாலையில், வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்ற முடிவு செய்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இழப்பீடு வழங்க 778 கோடி ரூபாயும், சாலை விரிவாக்கத்திற்கு, 174.92 கோடி ரூபாயையும் தமிழக அரசு ஒதுக்கியது

சாலை விரிவாக்க பணி, கடந்த 2008ம் ஆண்டு துவங்கியது. நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய்த் துறையும், சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஓராண்டாக, பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. மொத்தமுள்ள, 10.5 கி.மீ., துாரத்தில் ஆக்கிரமிப்புகள் மற்றும் பட்டா, நத்தம் போன்ற வகைப்பாடு இடங்கள் உள்ளன.

தற்போது வருவாய் கிராமம் வாரியாக, பட்டாதாரர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி, 95 சதவீதம் முடிந்துள்ளது. கட்டடங்கள் இடிக்கப்பட்ட பகுதியில், சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.   இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவகா குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்த நெரிசலை மேலும் குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி திருவான்மியூர் ரயில் நிலையம் முதல் உத்தண்டி வரையிலான 16 கிமீ தூரத்துக்கு சாலையின் மையப்பகுதியில் மேம்பால சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இந்த பணிக்கான திட்டமதிப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கபட்டுள்ளன.  இந்த மேம்பாலம்  அமைக்கும் பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என அரசு அறிவித்துள்ளது.