கடன் வாங்குவதில் முந்தைய அரசுகளின் சாதனையை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு முறியடித்துவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

பாகிஸ்தான் அரசை வழிநடத்துவதில் பிரதமர் இம்ரான் கான் ஓராண்டை நிறைவு செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் மட்டுமே பாகிஸ்தான் அரசின் கடன் அளவு அந்நாட்டின் மதிப்பில் 7,509 பில்லியனாக அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியான தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை பிரதமரின் அலுவலகத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 2018 மற்றும் ஆகஸ்ட் 2019 இடையிலான ஒராண்டு காலத்தில் மட்டும் வெளிநாட்டு மூலதனங்கள் வாயிலாக ரூ.2,804 பில்லியனும், (பாகிஸ்தான் ரூபாயில்) உள்ளூர் மூலதனங்கள் வாயிலாக ரூ. 4,705 பில்லியனும் அரசு கடனாக வாங்கியிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரூ.24,735 பில்லியனாக இருந்த பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கடன் அளவு, இந்த ஆண்டு ஆகஸ்டில் ரூ.32,240 பில்லியனாக அதிகரித்திருக்கிறது. முந்தைய எந்த அரசும் இது போன்று கடன் வாங்கியதில்லை என்றும் இது ஒரு சாதனை அளவு என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் அரசு முதல் காலாண்டில் ரூ.96,000 கோடி வரி வசூல் செய்துள்ளது. ஆனால் 1 ட்ரில்லியன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.