சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றிருந்த தேமுதிமுக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். போகும்போது, எப்படி வீல்சேரில் சென்றாரோ அதுபோலவே, வீல் சேரில் திரும்பி வந்துள்ளார்.ஆனால், அவர் நலமுடன் இருப்பதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு? நிற்க முடியாமலும், பேச முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார் கேப்டன் விஜயகாந்த். சிம்மக்குரலில் கர்ஜிக்கும் விஜயகாந்தின் குரல், தற்போது பேச முடியாத நிலையில், அவரது உடலும் வெகுவாக பாதிக்கப்பட்டு, வீல் சரில் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா உள்பட பல நாடுகளில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு (ஆகஸ்ட் 30-ஆம் தேதி) துபாயில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுக்கச் சென்றார். அவரதுடன் அவரது மகன் சென்றிருந்தார். பின்னாளில் அவரது மனைவி பிரேமலதா சென்றார்.
அங்கு சுமார் 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை முடிந்து துபாயில் இருந்து இன்று சென்னை திரும்பினார். அவருடன், , மனைவி பிரேமலதா மற்றும் இளைய மகன் சண்முகபாண்டியனுடன் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவரைக் கண்ட தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிகிச்சைக்காக துபாய் சென்றபோது, எந்த நிலையில், வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்டாரோ, அதே நிலையில்தான், அவர் வீல் சேரில் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆனால், கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், துபாயில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண நலம் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். நாங்க சிகிச்சை பெற்று குணம் அடைந்து விஜயகாந்த் வீடு திரும்பிய செய்தி கேட்டு விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.