சேலம்: சேலம் ஐந்துரோடு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான குறிஞ்சி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது என மாநில அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஒதுக்க தமிழக அரசு உத்ததரவிட்டு உள்ளது. சேலத்திலும்  சுமார் 35 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.  இவற்றில் 100க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் பெட் படுக்கை வசதிகள் உள்ளன

இந்த நிலையில்,  சேலத்தின் பிரதான பகுதியாக உள்ள  ஐந்து ரோட்டில் உள்ள  பிரபல தனியார் மருத்துவமனையான குறிஞ்சி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதில், மருத்துவமனையில் முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.  அதன்படி, மருத்துவமனையில்,  கொரோனா நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதிலும் தில்லுமுல்லு நடைபெற்றது  தெரியவந்தது.,

இதையடுத்து, மருத்துவத்துறை  சட்டப்படி, குறிஞ்சி  மருத்துவமனையில்,  இனிமேல் எந்தவொரு கொரோனா நோயாளியுத்ம சேர்க்கக்கூடாது என்று அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும், ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி, விதிமுறைகளின்படி அவர்களை முழுமையாக குணப்படுத்தியே பிறகே டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும், நோய் தொற்று குணமடைவதற்கு முன்பு எந்தவொரு நோயாளியையும் டிஸ்சார்ஜ் செய்யக்கூடாது என தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

குறிஞ்சி மருத்துவமனை மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  இந்த மருத்துவமனை அந்தப் பகுதியில் உள்ள நீர்வழிப்பாதையை  ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளது. அதனால் அந்த கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசியல் செல்வாக்கு காரணமாக இதுவரை நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.