சென்னை: தமிழகத்தின் ஆக்சிஜன் தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 18 மாவட்டங்களுக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
சிப்காட் நிறுவனம் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை 18 மாவட்டங்களுக்கு கரோனா சிகிச்சை பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை மாநிலத்தில் ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்புடைய சாதனங்களுக்கு மிகப்பெரும் பற்றாக்குறையைத் தோற்றுவித்துள்ளது.
இவற்றின் அவசரத் தன்மை மற்றும் தவிர்க்கப்பட இயலாத தேவையைக் கருதி, இந்த நெருக்கடியான பெருந்தொற்றுப் பரவல் சூழ்நிலையைச் சமாளித்திட, சுகாதாரத் துறைக்கும், உள்ளூர் அமைப்புகளுக்கும் உதவிட, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) போதிய அளவுக்கான ஆக்சிஜன் சாதனங்களைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உத்தரவுக்கிணங்கவும், கோவிட் பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், சிப்காட் நிறுவனம், சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் துபாயிலிருந்து 1,915 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகளையும், 3,250 ஓட்ட அளவு சிலிண்டர்களையும், 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், 800 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களையும் என, மொத்தம் 40.71 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்ய ஆணைகள் அளித்துள்ளது.
இதுவரை, 515 ஆக்சிஜன் சிலிண்டர்களும், 1,780 மருத்துவ ஆக்சிஜன் ஒழுங்குபடுத்தும் கருவிகளும், 250 மருத்துவ ஆக்சிஜன் ஓட்ட அளவு கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள கருவிகளைக் கூடிய விரைவில் வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உள்ளூர் வழங்குநர்களிடமிருந்து 4.33 கோடி ரூபாய் மதிப்பிலான, ஈரப்பதமூட்டியுடன் கூடிய ஓட்டக்கருவிகள், முறைப்படுத்தும் கருவிகள், செப்பு விசைக் குழாய்கள், வெளியேற்றும் குழாய்கள், பலவாயில் குழாய்கள் முதலியனவற்றை, சிப்காட் நிறுவனம் கண்டறிந்து கொள்முதல் செய்து பொதுப்பணித் துறை மருத்துவப் பணிகளுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில், இதுவரை உயிர்வளி இணைக்கப்படாத 1,000 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.
மேலும், சிப்காட் நிறுவனம், தனது தொழில் பூங்காக்களின் அருகில் அமைந்திருக்கும் தொழிற்பிரிவுகளிலிருந்து, 2,000 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தருவித்து, அவற்றின் தேவைக்கேற்ப, ஆக்சிஜனை நிரப்பி, கும்மிடிப்பூண்டி மற்றும் தூத்துக்குடி திட்ட அலுவலகங்கள் வாயிலாக, சென்னை மாவட்டத்திற்கு 1,010, சிவகங்கை மாவட்டத்திற்கு 130, விழுப்புரம் மாவட்டத்திற்கு 100, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 20, வேலூர் மாவட்டத்திற்கு 100, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 250, திருவள்ளூர் மாவட்டத்திற்கு 130, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 100, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 60, என, மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சைப் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஆணைகளில், 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சிங்கப்பூரிலிருந்து, விசாகப்பட்டினத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள, 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை கரூர் மாவட்டத்திற்கு 75, தருமபுரி மாவட்டத்திற்கு 75, நீலகிரி மாவட்டத்திற்கு 75, சிவகங்கை மாவட்டத்திற்கு 100, நாமக்கல் மாவட்டத்திற்கு 75, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 75, திருவாரூர் மாவட்டத்திற்கு 75, தேனி மாவட்டத்திற்கு 75, திண்டுக்கல் மாவட்டத்திற்கு 75, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 75, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 75, விருதுநகர் மாவட்டத்திற்கு 75, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 75, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 75, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 100, கடலூர் மாவட்டத்திற்கு 100, விழுப்புரம் மாவட்டத்திற்கு 75, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 50, என மொத்தம் 1400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை கரோனா சிகிச்சைப் பயன்பாட்டுக்காக வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் நிகழ்வினை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.