சென்னை
நவராத்திரியில் விரதம் இருப்பது பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கான ஆரோக்கிய விரத உணவுக்கான குறிப்புகள் இதோ.
நவராத்திரி என்றாலே அம்மன் உற்சவம், கொலு, வட இந்தியரின் ஆட்டம் பாட்டம் மட்டுமின்றி விரதமும் முக்கிய பங்கேற்றுள்ளது. பலர் இந்தக் காலத்தில் பக்திக்காக விரதம் இல்லாத போதும், அதனால் எடையைக் குறைக்கலாம் என விரதம் இருக்கின்றனர். விரதம் என்னும் பெயரில் முழுப் பட்டினி இருப்பதால் எடை குறையாது, மாறாக உடலில் சோர்வும் களைப்பும் அதிகரிக்கும். அது மட்டுமின்றி நீங்கள் விரதம் முடிந்து பழையபடி உணவு உண்ணும் போது கொழுப்பு அதிகரித்து மேலும் எடை கூடும்.
நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட விரத உணவு வகைகளை உட்கொள்வதால் உடலுக்கும் சோர்வு இராது, விரதத்துக்கும் பங்கம் ஏற்படாது. முக்கியமாக சைவ உணவும், மதுவை நிறுத்துவதும் விரதத்தின் போது செய்யும் முக்கிய காரியமாகும். அதுவே உடலை நன்கு சுத்தப்படுத்தி ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
ஜவ்வரிசி போன்ற ஆர்டிஃபிஷியல் உணவுகளை அடியோடு நிறுத்த வேண்டும். அத்துடன் கடலைகள், நெய் ஆகியவற்றையும் குறைத்துக் கொள்ள வேண்டும். பழங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். காராசேவு, மிக்சர் போன்ற நொறுக்கு தீனிகளை அடியோடு ஒதுக்கி விட வேண்டும். அடிக்கடி ஏதாவது பழங்கள், அல்லது காய்கறி சாலட் ஆகியவைகளை சாப்பிட வேண்டும்
பால் மற்றும் தயிர் சாப்பிடுவது மிக மிக நல்லது. சிலர் தயிரில் கொழுப்பு இருப்பதாக கருதினால் மோர் உபயோகிக்கலாம். அரிசியை குறைத்து சப்பாத்தி சாப்பிடலாம். அதே நேரத்தில் பூரியை சாப்பிடுவது கூடாது. சர்க்கரைக்கு பதில் வெல்லம் உபயோகிக்கலாம். சிறு தானியங்கள் சேர்த்து செய்த பொங்கல் (நெய் மிகக் குறைவாக) சாப்பிடலாம். கிழங்கு வகைகள் கூடவே கூடாது.
நமது தென்னகத்தை பொறுத்தவரை சுண்டல் செய்வோம். சாதாரண நாட்களிலேயே பயிறுகளை வேகவைத்து சாப்பிட பல உணவு நிபுணர்கள் வற்புறுத்தி வருவதால் சுண்டல் சாப்பிடுவது நல்லது.