டெல்லி: அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரியை 35%ல் இருந்து 15 சதவிகிதமாக குறைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதற்கு ஆப்பிள் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வருகைக்கு முன்னதாக, அமெரிக்க பாதாம், ஆப்பிள், வால்நட் மற்றும் பருப்பு மீதான இறக்குமதி வரி குறைப்புக்கு விவசாயிகள் சங்கங்கள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன. நிதி அமைச்சக சுற்றறிக்கையின்படி, மசூர் பருப்புக்கான இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 20% விதிக்கப்பட்டது. அதேபோல், வாஷிங்டன் ஆப்பிள் மீதான இறக்குமதி வரி 35%லிருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் மற்றும் பிரதமர் மோடி இடையே பல்வேறு திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த வார்த்தை யின் ஒரு பகுதியாக, அமெரிக்க ஆப்பில்களின் இறக்குமதிக்கான வரியை குறைக்க, அதிபர் பைடன் வேண்டுகோளை ஏற்று, பிரதமர் மோடி இறக்குமதி வரியை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஆப்பிள்களின் இறக்குமதி வரியை குறைக்கும் வகையில் இந்திய அரசு ஜி20 மாநாட்டில் முடிவு செய்துள்ளது.
மோடிஅரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள ஆப்பிள் விவசாயிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரியை குறைக்கும் நடவடிக்கை மோடி அரசு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் இந்த முடிவு காஷ்மீர், ஹிமாச்சல் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களைச் சேர்ந்த இந்திய விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மோடி அரசின் இந்த நடவடிக்கை, அமெரிக்க அரசாங்கம் அதிக மானியங்களை அளிப்பதன் மூலம் அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங் களுக்கு இது பயனளிக்கும் ஆனால், இந்திய ஆப்பிள் விற்பனை தடைபடும் என்றும், அதனால், ஆப்பிள் விவசாயிகள் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, ஜூன் 15, 2019 அன்று, அப்போதைய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்தியாவில் இருந்துஇறக்குமதி செய்யப்படும் ஸ்டீலுக்கு 25% மற்றும் பல அலுமினியப் பொருள்களுக்கு 10% வரி விதித்ததற்குப் பதிலடியாக அமெரிக்க ஆப்பிள்களுக்கான இறக்குமதி வரி 50 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. பின்னர், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அமெரிக்க அதிபர் பைடன் கோரிக்கையை எற்று, வாஷிங்டன் ஆப்பிள் மீதான இறக்குமதி வரியை 70-ல் இருந்து மீண்டும் 50 சதவீதமாக குறைத்திருந்தது. இதற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு பழ உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்கள் சங்கம் அதிருப்தியும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது அமெரிக்க ஆப்பிள்களுக்கான இறக்குமதி வரியை மேலும் குறைப்பது தொடர்பாக ஜி20 மாநாட்டில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது ஆப்பிள் விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.