சென்னை:

கொரோனா வைரஸ் தாக்கம், தமிழக விவசாயிகளையும் விட்டுவைக்கவில்லை. கறிக்கோழி விற்பனை அடியோடு குறைந்துவிட்ட நிலையில், கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் மக்காச்சோளமும், விற்பனையாகாமல் பெரும் சரிவை சந்தித்து வருகிறது… இது என்ன சோகம் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

கோழியினால் கொரோனோ பரவும் என்று எழுந்த வதந்தி காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகளில் கோழிக்கறி விற்பனை பெருமளவு சரிந்துள்ளது.  இந்த வதந்தியை போக்கும் வகையில் கறிக்கோழி கடைக்காரர்கள் பல்வேறு வகையில், இலவச சிக்கன் பிரியாணி, இலவச சிக்கன்65 போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்களை ஏற்படுத்தி வந்தாலும்,  அதை, இலவசமாக பெற்று  சாப்பிடும் மக்கள் காசுகொடுத்து வாங்க மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கறிக்கோழிகளின் முக்கிய தீவனமான மக்காச்சோளம் விற்பனையும் சரிந்துள்ளது. விலை மிகவும்  சரிந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் விலை குவிண்டால் ஒன்றுக்கு 1,800 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது ஒரு  குவிண்டால் 1,300 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது.

தற்போது விலை சரிவு காரணமாக விவசாயிக்கு ஏக்கருக்கு சுமார் ரூ.40,000 நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளனர்.