தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய தினத்திலிருந்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக, அரபிக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரி, தருமபுரி, கோவை, தேனி உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது வடமேற்கு தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை தொடரும். நீலகிரி, தருமபுரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகத்திற்கு இம்மாதம் கிடைக்க வேண்டிய 9 சென்டிமீட்டர் மழையில், இதுவரை 8 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை அயனாவரத்தில் 13 செ.மீ., பெரம்பூர், நீலகிரி கே.பிரிட்ஜ் பகுதிகளில் தலா 12 செ.மீ., மழையும், நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ., குன்னூரில் 8 செ.மீ., மற்றும் பொள்ளாச்சியில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.