சென்னை: மருத்துவப்படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு என்பதை உச்ச நீதிமன்றம் தான் முடிவு எடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.
மத்திய தொகுப்பு இடங்களில் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வமாக உயர்நீதி மன்றத்தில் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர உச்சநீதி மன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே உச்சநீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்யமுடியாது என்று கூறி உள்ளது.