டெல்லி: நான் இந்திரா காந்தியின் பேத்தி, உண்மையை சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை என்று உ.பி. அரசுக்கு காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி தந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த காப்பகத்தில் இருந்த 5 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு இல்லாத மேலும் இரண்டு சிறுமிகளும் கர்ப்பமாக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவர்கள் 7 பேரும் காப்பகத்துக்கு வரும் போதே கர்ப்பமாக இருந்ததாக கான்பூர் மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் விசாரணையில் உண்மைகள் மறைக்கப்படுகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியிருந்தார். அவர் வெளியிட்டது தவறான கருத்து என்றும், அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்திக்கு அம்மாநில சிறுவர்கள் உரிமைகள் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது.
இந் நிலையில் இது குறித்து பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிலடி தந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அவர்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துவிட்டு போகட்டும்.
நான் எப்போதும் உண்மைகளைப் பேசுவேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி, பெயர் அறிவிக்கப்படாத பாஜக செய்தித்தொடர்பாளர் அல்ல என்று கூறி உள்ளார்.