டில்லி:
சட்ட விரோத மணல் சுரங்கம் மற்றும் மணல் கடத்தல் நடப்பதை தடுக்கவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், தமிழகம் உள்பட 5 மாநிலங் களுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், இதுகுறித்து சிபிஐ மற்றும் மத்தியஅரசும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் ஆறு மற்றும் நதிகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சுற்றச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலும், திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தொடர்ந்து வருகிறது.
இதை தடுக்கக்கோரியும், சட்டவிரோதமாக மணல் அள்ளுவது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநிலங்களில் பரவலாக சட்டவிரோத மணல் சுரங்கங்கள் செயல்பட்டு வருவதாகவும், இது சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ். ஏ போப்டே தலைமையிலான பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், பிரணவ் சச்ச்தேவா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது, தமிழகம் உள்பட சில மாநிங்கள், தேவையான சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வருகிறது என்று தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு விளக்கம் கேட்டு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் இது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை மற்றும் மத்தியஅரசும் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.