திருவனந்தபுரம்: சட்டவிரோத பண மோசடி தொடர்பான புகாரின் பேரில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், அவரின் மனைவி கமலா, மகள் வீணா ஆகியோருக்கும் தூதரகத் தங்கக் கடத்தலில் தொடர்பு இருக்கிறது’’ என முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்த நிலையில், CMRL ஊழல் வழக்கிலும், வீணா விஜயன் மீது வழக்குத் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், தற்போது, ‘கொச்சி மினரல்ஸ்’ வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன். இவரது தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயனின் மகள் வீணா. இவர், பெங்களூரை தலைமையிடமாக வைத்து, ‘எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
முதல்வரின் மகள் வீணா மீதுபல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தனது தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி பயன் அடைவதாகஎதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதைத்தொடர்ந்து, இவரது நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்திய வருமான வரித்துறை, அங்கு கிடைக்கபெற்ற ஆவணங்களை ஆய்வு செய்ததில், ‘கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல்’ எனும் நிறுவனம் வினாடிக்கு 1.72 கோடி ரூபாய் செலுத்தி இருப்பதை கண்டுபிடித்தது. எக்சாலாஜிக் நிறுவனம் அதற்காக எந்த சேவையையும் கொச்சின் மினரல்சுக்கு வழங்கவில்லை எனவும் தெரிவித்தது.
இதையடுத்து, மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத் துறையின் விசாரணைப் பிரிவான, தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (Serious Fraud Investigation Office, SFIO) எக்சாலாஜிக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறையில் புகார் அளித்தது. புகாரை ஏற்ற அமலாக்கத்துறை, எக்சாலாஜிக் நிறுவனம், அதன் நிர்வாகியான வீணா மற்றும் பலர் மீது சட்டவிரோத பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்j நிலையில், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கொச்சி மினரல்ஸ் வழக்கில் வீணா மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்த வழக்கில் 25 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீணாவும், அவரது நிறுவனமும், ரூ.2.73 கோடி வரை சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.