விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாராயம் குடித்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக போதைப்பொருட்கள், கள்ளச்சாராயம், கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்துவதாக ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் கூறி வருகின்றனர். ஆனால், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களே இதுபோன்ற முறைகேடு களில் ஈடுபடுவதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் அருகே அரசூர் மற்றும் குமாரமங்கலம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை வெகுஜோராக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், அங்கு கள்ளச்சாராயம் வாங்கி குடித்த ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோருக்கு வயிற்று வலி மற்றும் பகண் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக்கண்ட அவர்களது குடும்பத்தினர், உடனே அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன் பிறகு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் சற்று உடல் தேறிய நிலையில் பொது வார்டிற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று (ஜூலை 04) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கூறும்போது, “ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் இவர்கள் மூவரும் புதுச்சேரியில் இருந்து வாங்கிவந்த கள்ளச்சாராயத்தை குடித்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் மூன்று பேரில் புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்தது முருகன் தான் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆகவே இதன் அடிப்படையில், முருகன் மீது வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் அதிகம் பேசுபொருளாகியுள்ளது.
சமீபத்தில்தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த நிலையில், விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.