திருச்சி: 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால், மாணாக்கர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில், தமிழகஅரசு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் பள்ளி சென்று வீடு திரும்பிய பின் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிது.

 பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு  ‘இல்லம் தேடிக் கல்வி’ மையங்களில் கற்பித்தல் சேவை  வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  வரும் ஜனவரி மாதம்  முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என   தெரிவித்துள்ளார். அடுத்தக்கட்டமாக  திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்  எனவும் அறிவித்துள்ளார்.