நாகர்கோவில்:
ஓகி புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.
அப்போது, ‘உங்களுக்காக ஆட்சியாளர்களிடம் குரல் கொடுப்பேன்’ என்று குமரியில் பொதுமக்களிடையே ராகுல் உருக்கமான பேசினார்.
கடந்த 30-ந்தேதி வீசிய ஓகி புயல் குமரி மாவட்டத்தில் பேரிழப்பை ஏற்படுத்தியது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள்.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ள ராகுல்காந்தி இன்று குமரி மாவட்டம் வந்தார்.
இன்று காலை 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட ராகுல், கடற்கரை கிராமங்களான விழிஞ்ஞம், பூத்துறை பகுதிக்கு சென்றார். அங்கு ஓகி புயலால் உயிரிழந்த கேரள மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மீனவர்களின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் குமரி மாவட்டம் வந்தார். தூத்தூரில் உள்ள புனித யூதா ததேயூ கல்லூரி மைதானத்தில் வந்து இறங்கிய அவர், அங்கிருந்து கார் மூலம் சின்னத்துறை மீனவ கிராமத்திற்கு சென்றார்.
குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில், மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். புயலில் சிக்கி பலியான மீனவர் குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது மீனவ குடும்பங்களின் கண்ணீர் மல்க கோரிக்கையை கண்ட ராகுல் கண்கலங்கினார். பின்னர் குமரி மாவட்ட விவசாயிகளையும், விவசாய பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார். அப்போது புயலில் சாய்ந்த மரங்கள், மழை நீரில் மூழ்கிய பயிர்கள், இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடையே அமர்ந்து, அவர்களின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார்.
அதைத்தொடர்ந்து மக்களிடையே பேசிய ராகுல், வணக்கம் என தமிழில் ஆரம்பித்து பின்னர் ஆங்கிலத்தில் பேசினார். அவரது பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தமிழில் மொழி பெயர்த்து கூறினார்.
ராகுல் பேசியதாவது, நான் மிகுந்த துக்கத்தோடு இங்கே வருகை தந்துள்ளேன். மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பின் வலியை என்னதாலும் அறிய முடிகிறது.
குஜராத் சட்டமன்ற தேர்தல் காரணமாக, ஓகி பாதிப்புக்குள்ளான கன்னியாகுமரிக்கு வர இயல வில்லை என்றும், தான் தாமதமாக வந்திருப்பதால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாவும் கூறினார்.
மேலும், தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லை. இருந்தாலும், உங்களுக்காக ஆட்சியாளர்களிடம் குரல் கொடுப்போம் என்றார்.
மேலும், நாடு முழுவதும் மீனவர்கள் பல சிரமங்களை சந்தித்து வருவதாக கூறிய ராகுல், மீனவர்களுக்கென தனி அமைச்சகம் இருந்திருந்தால் உங்களது பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும் என்று உருக்கமாக கூறினார்.
ராகுலின் உருக்கமான பேச்சு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மீனவ மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களோடு மக்களாக கலந்து, அவர்களின் துக்கங்களை பகிரிந்துகொண்ட ராகுல்காந்தியின் நடவடிக்கை மற்றும் மக்களிடம் இயல்பாக பழகம் அவரின் தன்மை ஆகியவை கண்ட குமரி மக்கள், வருங்கால இளம் தலைவரான ராகுல் காந்திதான் மக்கள் தலைவர் என கூறினர்.
இதுபோன்ற எளிமையான ஒரு தலைவர் இதுவரை இல்லை என்றும், ராகுல்காந்தி பிரதமராக வந்தால்தான் நாடு சுபிட்சம் பெறும் என்றும் அவர்கள் பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியின்போது ராகுல்காந்தியுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற குழு காங்கிரஸ் தலைவர் ராமசாமி, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், மாணிக் தாகூர், முகுல் வாஸ்னிக் உள்பட பலர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், ராகுல்காந்தி மீண்டும் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். அங்கு மாநில காங்கிரசார் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரவு 8 மணிக்கு அவர், விமானம் மூலம் டில்லி செல்கிறார்.