தான் இசையமைத்த பாடல்களைப் பாடக்கூடாது என தன் நீண்டகால நண்பரான பாடகர் எஸ்.பி.பிக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து எஸ்.பி.பி., “சட்ட நடைமுறைகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நெருங்கிய நண்பரான இளையராஜா இதை என்னிடம் நேரிடையாகவே தெரிவித்திருக்கலாமே” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.
ஆனால், “இளையராஜா அப்படித்தான். தன் உடன் பிறந்த தம்பியான கங்கை அமரனையே தொழில் எதிரியாக பார்ப்பவர்” என்கிறார்கள் திரை உலகினர்.
இதற்கு உதராணமாக, முன்பு பாக்யராஜ் அளித்த பேட்டி ஒன்றை சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த பேட்டியில் பாக்யராஜே கூறிய அந்த சம்பவம் இதுதான்:
“நான் முதன்முதலாக இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள் திரைப் படத்துக்கு கங்கை அமரன்தான் இசை அமைத்தார். அந்த படம் வெற்றி பெற்றதோடு, பாடல்களும் மிகப்பிரலமாகின. அதையடுத்து, எனது மவுனகீதங்கள் படத்துக்கும் அவர்தான் இசையமைத்தார். அந்த படமும் பெரும் வெற்றி அடைந்ததோடு. பாடல்கள் ஹிட் ஆகின.
இந்த நிலைியல் ஏவி.எம்.நிறுவனத்துக்காக, முந்தானை முடிச்சு படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். இதற்கும் கங்கை அமரனே இசையமைக்க வேண்டும் என்றேன். ஆனால் ஏவி.எம். நிறுவனத்தினர், “இளையராஜாதான் இசையமைக்க வேண்டும்” என்று உறுதியாக இருந்தனர்.
இதை அறிந்த கங்கை அமரன், “அதனால் என்ன.. பரவாயில்லை. உங்களது அடுத்த படத்துக்கு நான் இசையமைக்கிறேன். இந்த படத்துக்கு அண்ணன் இளையராஜா இசையமைக்கட்டும்” என்றார்.
இளையராஜாவோ, “இந்த படத்துக்கு நீ கங்கை அமரன்தானே வேண்டும் என்று கூறினார். ஆகவே என்னால் உன் படத்துக்கு இசையமைக்க முடியாது” என்றார் கோபமாக.
நான், “கங்கை அமரன் யார், ஆப்பிரிக்காக்காரரா, உங்களது தம்பிதானே” என்று பலவிதமாக பேசி அவரை சமாதானம் செய்து ஒப்புக்கொள்ள வைத்தேன்!”
– இதுதான் அந்த பேட்டியில் பாக்யராஜ் கூறிய சம்பவம்.
இதைச் சுட்டிக்காட்டும் திரையுலகினர், “தம்பியான கங்கை அமரனையே தொழில் எதிரியாக பார்ப்பவர்தான் இளையராஜா” என்கிறார்கள் வருத்தத்துடன்.