சென்னை: இளையராஜா கூறியது அவரது சொந்த கருத்து, அவர் குறித்து எந்தக் கருத்தையும் திமுகவினர் கூறக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாக எம்.எல்.ஏவும், திமுக இளைஞர் அணி தலைவருமான  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இன்று தனது தொகுதிக்குட்பட்ட  அண்ணாசாலை மன்வாரிய அலுவலகத்தில்   உடற்பயிற்சி மற்றும் உள் விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். தொடர்ந்து, திருவல்லிக் கேணி தொகுதியில்  புதியதாக அமைக்கப்பட்டுள்ள வளைய சுற்றுத்தர மின் அமைப்பினையும், சட்டக்கல்லூரி பெண்கள் விடுதி அருகே வளைய சுற்றுத்தர மின் அமைப்பினை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மின்வெட்டை தவிர்ப்பதற்காக மின்சாரத் துறை அமைச்சரிடம் புதிதாக வளைய சுற்றுத்தர அமைப்பு RMU அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது வரை 29 இடங்களில் இந்த புதிய வளைய சுற்றுத்தர அமைப்பு RMU (ring main unit ) அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 12 இடடங்களில் rmu அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 108 இடங்களில் rmu அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்திற்குள் மேலும் 48  இடங்களில் rmu அமைக்கப்படும் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், அம்பேத்கரும் மோடியும் ஒரே சிந்தனை உள்ளவர்கள் என இளையராஜா கூறியது, அவருடைய தனிப்பட்ட கருத்து. இளையராஜா குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இளையராஜா மட்டுமல்ல யாரை ஒருமையில் விமர்சித்தாலும் அது தவறு. அநாகரிகமாக யார் விமர்சித்தாலும் அது தவறு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.