சென்னை: திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மேற்குவங்க மாநில பொறுப்பு ஆளுநர், நலமுடன் இருப்பதாகவும், இன்று மாலை அல்லது நாளை காலை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
தமிழக பாஜக மூத்த தலைவரான இல.கணேசன், மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ள இலகணேசன் தற்போது மணிப்பூர் மாநில கவர்னராகவும், மேற்குவங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருந்து வருகிறார். விடுமுறைக்காக அவர் சென்னை வந்திருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவு (நெஞ்சுவலி) ஏற்பட்டது. இதைடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் பேஸ்புக் சமூக வலைதளத்தில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மேற்கு வங்க மற்றும் மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் பூரண நலம்பெற எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு இருதயத்தில் ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் இன்று இரவு அல்லது புதன்கிழமை காலை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.