சென்னை: மூச்சை அதிக நேரம் அடக்கிக் கொண்டிருந்தால், கொரோனா நோய்க் கிருமி நுரையீரலுக்குள் புகும் வாய்ப்பு அதிகம் என்று சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
நுரையீரல் பிரச்சினைகள், நுரையீரல் சிக்கல்கள் கடுமையான கொரோனாவுடன் தொடர்புடைய மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸானது நுரையீரலை தாக்குவதன் மூலம் நோயாளியை பலமிழக்க செய்கிறது.
இந் நிலையில், மூச்சை அதிக நேரம் அடக்கிக் கொண்டிருந்தால், கொரோனா நோய்க் கிருமி நுரையீரலுக்குள் புகும் வாய்ப்பு அதிகம் என்று சென்னை ஐஐடி அறிவித்து உள்ளது. பேராசிரியர் மகேஷ் பஞ்சகுலா தலைமையில் அர்னாப் குமார் மாலிக், சவுமால்யா முகர்ஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவில் இந்த தகவலை வெளியிட்டு உள்ளனர்.
இது குறித்து பேராசிரியர் மகேஷ் பஞ்சகுலா கூறி இருப்பதாவது: எங்களின் கொரோனா தொடர்பான ஆராய்ச்சியானது, நுரையீரல் தொடர்பான தீவிர நோய்களில் ஒரு முக்கிய விஷயத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. ஆராய்ச்சியில் நோய் கிருமிகள் எப்படி நுரையீரலுக்குள் செல்கின்றன என்பது தெரிய வந்தது.
காற்று வெளியில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் கிருமிகள் நுரையீரலின் ஆழமான பகுதிக்குள் சென்றுவிடுகின்றன. மூச்சை அதிக நேரம் அடக்கிக் கொண்டிருந்தால், கொரோனா நோய்க் கிருமி நுரையீரலுக்குள் புகும் வாய்ப்பு அதிகம் என்பதையும் கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
லேசாக மூச்சை அடக்கி கொண்டிருப்பவர்கள், அதிக நேரம் மூச்சை அடக்கி கொண்டிருப்பவர்கள் என வகைப்படுத்தி இந்த ஆராய்ச்சியை நடத்தி உள்னளர். முன்னதாக இதே ஆராய்ச்சி குழுவினர், ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து மற்றொருவருக்கு தும்மும் போது நீர்த்திவலைகள் வழியாக கொரோனா எவ்வாறு பரவுகிறது என்பதை கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.