சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விடுதியில் தங்கி படிக்கும் வெளிமாநில மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள ஐஐடியில் உத்திரப்பிரதேச மாநிலம் கோபாலை சேர்ந்த பாபு என்ற மாணவர் எம்.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வெளிமாநிலத்தை சேர்ந்த பாபு ஐஐடியில் உள்ள பிரம்மபுத்திரா விடுதியில் தங்கி படித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது அறையில் நேற்றிரவு திடீரென தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் பரவியது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடனடியாக உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இதேபோன்று வெளிமாநிலத்தை சேர்ந்த பிஎச்டி மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
வெளிமாநிலங்களில் இருந்து வந்து கனவுகளுடன் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் காரணம் தெரியாமல் தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் நலன் கருதி அவர்களின் மன அழுத்தத்திற்கான காரணங்களை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.