சென்னை:  கல்வியாளர்கள், மாணவர்கள பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற சென்னை ஐஐடி-யின் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா நாளை தொடங்குகிறது. ஐந்து நாட்கள்  நடைபெறும் இந்த விழாவுக்கு  நாடு முழுவதும் இருந்து 50ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பகீறது.

. நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும்  தொழில்நுட்ப விழாவான,  சென்னை ஐஐடியின் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா 2025, ஜனவரி 3ந்தேதி முதல் 7ந்தேதி  வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா திருவிழாவின் 26-வது ஆண்டு நிகழ்வை 2025 ஜனவரி 3-ம் தேதி முதல் 7-ந் தேதி வரை நடத்தவிருக்கிறது. முற்றிலும் மாணவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இந்த மாபெரும் நிகழ்வில் சென்னை ஐஐடி-ன் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்வேறு வகைகளில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

ஐஎஸ்ஓ 9001:2015 சான்றளிக்கப்பட்ட இத்திருவிழாவில் 130 அரங்குகள் இடம்பெறுகின்றன. அடுத்தடுத்து 80 நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்து நாட்களில் 70,000 பேர் இவற்றைப் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், பயிலரங்கங்கள் வாயிலாக இந்த அறிவியல்- தொழில்நுட்ப நிகழ்வை சாஸ்த்ரா கொண்டாடவிருக்கிறது.

இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (30 டிசம்பர் 2024) சாஸ்த்ரா 2025 அறிவிப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடையே பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை ஐஐடி மாணவர்கள் இதுபோன்ற தேசிய நிகழ்வுகளில் பங்கேற்று மதிப்புவாய்ந்த திறமையை வெளிக்கொணர முடிகிறது..  “சாஸ்த்ரா போன்றதொரு மாபெரும் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், மாணவர்களிடையே நிர்வாகத் திறன், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, பொது நோக்கத்திற்காக பெரிய குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் திறன் போன்ற மதிப்புமிக்க பண்புகளை வளர்க்கச் செய்கிறது.

பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோர் மட்டுமின்றி, தலைசிறந்த முக்கிய பிரமுகர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. அவர்கள் எல்லோரையும் எவ்வாறு தொடர்பு கொள்வது, அவர்களை எப்படிக் கையாள்வது என்பதை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது”  என்றார்.

இந்த ஆண்டுக்கான சாஸ்த்ரா மாநாடு மற்றும் ஆராய்ச்சி மாநாட்டில் ‘எதிர்கால நகரங்கள்’ மற்றும் ‘ஸ்மார்ட் உற்பத்தி’ என்ற தலைப்பில் இரு புதிய பகுதிகளை அறிமுகப்படுத்துகிறோம்  என சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்தியநாராயணன் என் கும்மாடி தெரிவித்தார்.

இந்தக் களங்களில் நீடித்த அணுகுமுறைகளை உள்ளடக்கிய அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். சாஸ்த்ராவின் 26வது ஆண்டு நிகழ்வை புதிய நிலைக்கு எடுத்துச்செல்ல வருடம் முழுவதும் பாடுபட்டுவரும் ஆசிரிய ஆலோசகர் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைத்து மாணவர் குழுக்களும் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்கான கல்விநிறுவன திறந்தவெளி அரங்கில் (Institute Open House) 2 நாட்களுக்கு சென்னை ஐஐடி-ன் ஆய்வகங்கள், சிறப்பு மையங்களை அனைவரும் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பார்வையாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் முழுமையான அனுபவத்தை வழங்கும் முயற்சியில் ஐந்து நாள் நிகழ்வுகள் கண்காட்சிகள், போட்டிகள், நகைச்சுவை மற்றும் இசை நிகழ்ச்சிகள், மாநாடுகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

சாஸ்த்ரா 2025-ல் பல்வேறு மாநாடுகள் மற்றும் உச்சிமாநாடுகளும் நடைபெறவிருக்கின்றன.

தொழில்துறை செயற்கை நுண்ணறிவு மாநாடு (IndustriAI Conference): சாஸ்த்ரா வரலாற்றில் முதன்முறையாக சர்வதேச ஆராய்ச்சி மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. செயற்கை நுண்ணறிவை விரைந்து ஒருங்கிணைத்தல், மிகப்பெரிய தரவுப் பகுப்பாய்வு, ரோபாடிக்ஸ் போன்றவை தொழில்துறை புரட்சியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்கப்படும். “ஸ்மார்ட் மேனுபேக்சரிங்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு என்ஐஓடி, டெமினோஸ் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

எதிர்கால நகரங்கள் மாநாடு (Future Cities Summit): எதிர்கால நகரங்கள் தொடர்பான 3 நாள் மாநாட்டில் நகர்ப்புற திட்டமிடல், நிலைத்தன்மை, ஆற்றல், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், பேனல்கள், நேரடி செயல் விளக்கங்கள், சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவின் ஸ்டார்ட்அப்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். ஆய்வக சுற்றுப்பயணங்கள், உலகளாவிய நிபுணர் நுண்ணறிவு, தொழில்துறை தலைவர்களுடன் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் ஆகியவை சிறப்பம்சங்களாக இடம்பெறும்.

இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் தொழில்நுபங்கள்:

  •  சாஸ்த்ரா வான்வழி ரோபாட்டிக்ஸ் சவால் (Shaastra Aerial Robotics Challenge): தானியங்கி டிரோன் இயக்குதலை உள்ளடக்கியது. புவி வேலியிடப்பட்ட பகுதியில் ட்ரோன்கள் இலக்கைக் கண்டறிந்து தாங்குசுமையை (payload) துல்லியமாகத் தரையிறக்குதல். அவற்றின் புரோகிராமிங், சென்சார் திறன்களை நிரூபிக்கும் வகையில் தானியங்கி முறையில் செயல்படும்
  • ரோபோ சாக்கர் (RoboSoccer): இந்த நிகழ்வில் அணிகள் தங்கள் விருப்பப்படி வடிவமைத்த ரோபோக்களை போட்டிக் கால்பந்து ஆட்டங்களில் ஈடுபடுத்தும். மேம்பட்ட நிரலாக்கம் மற்றும் உத்திசார் விளையாட்டை வெளிப்படுத்துவதுடன், டிரிப்ளிங், பாஸிங், ஸ்கோரிங் உட்பட சிறந்த திறன்களையும் இந்த ரோபோக்கள் வெளிப்படுத்தும்.
  • ஆல்கோ டிரேடிங் (Algo Trading): பங்கேற்பாளர்களுக்கு வர்த்தக வழிமுறைகளை வடிவமைத்து செயல்படுத்த தனித்துவமான தளத்தை வழங்குகிறது. அல்கோபுல்ஸ் (AlgoBulls) தளத்தில் அணிகள் போட்டியிட்டு, குறியீட்டு முறை, நிதித்திறமை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் நிகழ்வில் உத்திகளைக் எடுத்துரைக்கும்.
  • பெட்ரி டிஷ் சவால் (Petri-dish Challenge): தொடர்ச்சியான கடும் ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியாவை இந்த நிகழ்வில் அடையாளம் காணமுடியும்.
  • சாஸ்த்ராவில் முதன்முறையாக ஈரமான ஆய்வகப் (wet lab) போட்டி சென்னை ஐஐடி உயிரித் தொழில்நுட்ப துறையின் ஆய்வகங்களில் என்ஐஓடி நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது.

டெக்-எண்டர்டெயின்மென்ட் நைட் (Tech-Entertainment Night): டெக்னோ மியூசிக், நேரடி இசையும் இணைந்த சாஸ்த்ராவின் டெக்-என்டர்டெயின்மென்ட் நைட் இடம்பெறும். கலகலப்பான துடிப்புகளின் கலவையைக் கொண்டிருக்கும். ஹிப்-ஹாப் கலைஞரான கரண் காஞ்சன், சர்வதேச டிஜே கமிலா ஆகியோர் நிகழ்வில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பலவிதமான தாளங்களையும் மெட்டுகளையும் அவர்கள் மேடைக்குக் கொண்டு வருவார்கள்.

நகைச்சுவை இரவு (Comedy Night): அன்றாட நிகழ்வுகளில் கிடைக்கும் அனுபவங்கள் தொடங்கி அபத்தமான கருத்துகள் வரை, நகைச்சுவை நடிகர்கள் பார்வையாளர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பார்கள். மேடை நகைச்சுவையாளர் குர்லீன் பன்னு நிகழ்ச்சியில் பங்கேற்பார். பத்ம பூஷண் விருது பெற்ற புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன், ஐ.நா.வுக்கான முன்னாள் இந்திய நிரந்தர தூதர் ருச்சிரா கம்போஜ், பத்மஸ்ரீ விருது பெற்ற கணிதவியலாளர் டாக்டர் சுஜாதா ராமதுரை ஆகியோர் சிறப்பு விரிவுரைகள் வழங்க உள்ளனர்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.